வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (05/10/2018)

கடைசி தொடர்பு:17:45 (05/10/2018)

`திருச்சி - நாகப்பட்டினம் வரை ரயில் பாதை நீட்டிப்பு!’ - ரயில்வே நிர்வாகம் தகவல்

`திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வரையிலான ரயில் பாதையை நாகப்பட்டினம் வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது' என திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் உதயகுமார் ரெட்டி பேட்டியளித்தார். 

                                  


அரியலூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி, குடிநீர் விநியோகம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் உதயகுமார் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதுகாப்பான பயணம், தூய்மையான ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆய்வுப் பணி நடைபெற்றுவருகிறது அரியலூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் விரைவு ரயில்கள் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.

                                       

இப்பணி முடிவடைந்த உடன் விரைவு ரயில்கள் இயக்கப்படும். இதனால் 20 நிமிடம் வரை பயண நேரம் குறையும் பண்டிகைக் காலங்களில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரியலூர் - பெரம்பலூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலப் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். திருச்சி கோட்டத்தில் சுமார் 1,000 கோடி மதிப்பில் பல்வேறு ரயில்வே பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி கோட்டத்தில் உள்ள திருச்சி காரைக்கால் ரயில் பாதை மற்றும் திருச்சி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் பாதை முழுமையும் மின் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது விழுப்புரம் முதல் சிதம்பரம் மற்றும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வரையிலான ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வரை ரயில் பாதை மின் பாதையாக மாற்றுப் பணியை நாகப்பட்டினம் வரையில் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’ எனக் கூறினார். ஆய்வின்போது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.