வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:19:00 (05/10/2018)

` பத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு..!' - 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, ஐந்து மாவட்ட கலெக்டர்கள் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. 

வழக்கறிஞர் அருண் நிதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், " மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளைப் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தரக் கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதியரசர்கள் ராஜா,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உயர்  நீதிமன்ற மதுரைக் கிளை

அப்போது, ` மதுரை திருப்பரங்குன்றம், மேலமடை, தென்கரை, விளாச்சேரி, செல்லூர், ஆத்திகுளம், தத்தனேரி, அனுப்பானடி உள்ளிட்ட 10 கண்மாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளது என உறுதிசெய்யப்பட்டுள்ளது' என்று கூறிய நீதியரசர்கள், ` மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட கலெக்டர்களும், வரும் அக்டோபர் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டனர். மேலும், ` ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.