வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:17 (22/10/2018)

`என்னோடு இரஞ்சித்தும் மாரியும் சேர்ந்திருக்கிறார்கள்' - நெகிழ்ந்த `சாய்ராட்’ நாகராஜ் மஞ்சுளே

னித சமூகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங்கள் அனைத்திலும், ஏதோ ஒரு வகையில் கலை தொடர்புடையதாக இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மற்ற எல்லா கலைப் படைப்புகளையும் தாண்டி, சினிமா பலதரப்பு மக்களையும் சென்றடையும் வலுவானதோர் ஊடகமாகியுள்ளது.                                                                                                                                                                        

மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் திரைப்படம்  வெளியானதிலிருந்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளமெங்கும் பகிர்ந்தவண்ணம் உள்ளனர். திருமாவளவன், சீமான், நல்லகண்ணு, சி.மகேந்திரன் உள்ளிட்டோர் படத்தைப் பற்றிய தங்களின் அனுபவங்களைப் பகிரந்துகொண்டனர். நேற்றைய தினம் பென்றி, சாய்ராட் படங்களின் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்பெற்ற நாகராஜ் மஞ்சுளே 'பரியேறும் பெருமாள் திரைப்படத்தைக் காண்பதற்காகச் சென்னை வந்திருந்தார். ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டரில் அவருக்காகப் படம் திரையிடப்பட்டது. நாகராஜ் மஞ்சுளேவுடன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் படத்தைப் பார்த்தனர். 

படத்தைப் பார்த்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ் மஞ்சுளே, "இந்தப் படம் நான் விரும்பும் கதைகளைப்போல என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. இயக்குநரின் முதல் படம் இது என நினைக்கத் தோன்றவில்லை. படம் எடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இந்தியா முழுமைக்கும் சாதி அம்சம் ஒரே மாதிரிதான் உள்ளது. ஒடுக்குமுறையும் ஒரே மாதிரிதான் உள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்வைப் படத்தில் சொல்லும்போது அது தட்டையாக இல்லாமல் சுவாரஸ்யமானதாக எடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு நான் முதல்முறையாக வருகிறேன். முதல் முறையே இப்படியொரு படத்தைப் பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நானும் இரஞ்சித்தும் பேச விரும்புகிற அதே விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு இன்னொரு நண்பர் (மாரி செல்வராஜ்) கிடைத்திருக்கிறார். அம்பேத்கர், சட்டத்தின் வழியே சாதியை ஒழிக்க முயற்சி செய்தார். சாதியை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். சினிமா எடுப்பதன் மூலம் சாதியை ஒழிக்க முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு குறித்த விவாதத்தை சமூகத்தில் ஏற்படுத்தலாம்” என்றார் நிதானமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க