வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (05/10/2018)

கடைசி தொடர்பு:19:40 (05/10/2018)

ஒருநாள் மழைக்கே 500 ஏக்கர் பயிர் மூழ்கிவிட்டது! - நாகை விவசாயிகள் வேதனை

Paddy field

நிலத்தடி நீரைப் பயன்படுத்தி நடவு செய்து, நேரடி நெல் விதைப்பு செய்திருந்த சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள்,  ஒரு நாள் மழையிலேயே மூழ்கியதால், விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  

Paddy field

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதரவேளுர், படுகை, பெரம்பூர், சென்னியநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாசன வாய்க்கால்கள் வழியே விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.  என்றாலும், மின்மோட்டார்கள் மற்றும் டீசல்           இன்ஜின்கள் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சம்பா நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர்.  பலர் நாற்றுவிட்டு, பறித்து நடவுப் பணி முடித்திருந்தனர்.  சிலர், நேரடி நெல் விதைப்பு மூலம் பயிர் வளர்த்திருந்தனர்.  இப்படி விளை நிலங்களில் செய்த சாகுபடி, இளம் பயிராக இருந்த நிலையில், இப்பகுதியில் இடைவிடாமல் தொடர்ந்து ஒருநாள் முழுவதும் கனமழை பெய்ததால், நெற்பயிர்கள் யாவும் தண்ணீரில் மூழ்கிவிட்டன.   மழை தொடர்வதால், பயிர்களெல்லாம் முற்றிலும் அழுகி வீணாகிவிடும் அபாயம் உள்ளது.  ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.20 ஆயிரம் செலவிட்டு கஷ்டப்பட்டு வளர்த்த பயிர்களை இழக்கின்ற அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.  

இதுபற்றி மாதரவேளுர் விவசாய சங்கத் தலைவர் காமராஜ் பேசுகையில், “சம்பா சாகுபடி செய்து ஒருவாரம் கூட கடந்திடாத நிலையில், திடீர் மழையால் சுமார் 500 ஏக்கர் பயிர்கள் யாவும் மூழ்கிவிட்டன.  கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர் இன்றி விவசாயம் பொய்த்துவிட்டது.  தற்போது மிகுந்த ஆவலுடன் நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் சாகுபடிசெய்த பயிர்கள் மூழ்கிக் கிடப்பதால், எங்கள் பகுதி விவசாயிகள் பெரும் துயரில் மூழ்கியுள்ளனர்.  ஒருநாள் மழைக்கே இந்தக் கதி என்றால், எஞ்சிய மழைக் காலத்தை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியவில்லை” என்றார்.