வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (05/10/2018)

கடைசி தொடர்பு:20:20 (05/10/2018)

"அ.தி.மு.க-வுக்கு 5 வருஷ எல்.இ.டி. வாரண்ட்டி இருக்கிறது..!’’ - தம்பிதுரையின் குபீர் லாஜிக்

"அ.தி.மு.க அணையும் விளக்கு அல்ல. 5 வருடங்கள் எரியும் வாரண்டி உள்ள எல்.இ.டி விளக்கு" என்று மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை அதிரடியாகப் பேசினார்.

தம்பிதுரை

 கரூர் தொகுதி எம்.பி-யும்,மக்களவை துணைச் சபாநாயகருமான தம்பிதுரை, அடுத்த வருடம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கரூர் தொகுதி முழுக்க மக்களை சந்தித்துவருகிறார். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் உள்ளிட்டோரோடு ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களை சந்திக்கிறார். மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றை உடனே நிறைவேற்றும்படி சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடுகிறார். அதோடு,செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியாக கருத்து தெரிவித்தும் வருகிறார். அந்த வகையில், கரூரை அடுத்த காகிதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து, மனுக்களை வாங்கும் நிகழ்ச்சியில், மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம்...

 "மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும். இந்த விலை உயர்வால் அப்பாவி மக்கள் வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. எல்லோரும் சைக்கிள் ஓட்ட பழகும் சூழல் உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு வந்த பிறகு, மாநில அரசின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்க வேண்டும். 'அணையப்போகும் விளக்குதான் பிரகாசமாக எரியும். அதுபோலத்தான், தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு. சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடும்'னு தி.மு.க கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அவரின் ஆசை பலிக்காது. அவர் காண்பது பகல் கனவு.

அ.தி.மு.க அணையும் விளக்கு அல்ல. ஐந்து வருட வாரண்டியுடன் பிரகாசமாக எரியும் எல்.இ.டி விளக்கு போல ஐந்தாண்டு ஆட்சி முடிந்து, அதன் பிறகும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னதுபோல 100 ஆண்டுகள் அ.தி.மு.க-வின் ஆட்சி தொடரும். 'மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டணி வைக்க வேண்டும்'னு திருமாவளவன் பேசியிருக்கிறார். அவர் போன தடவை கூட்டணி அமைத்தது போல அமைக்க ஆசைப்படுகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. ஏனென்றால்,அ.தி.மு.க-வை யாராலும் அழித்துவிட முடியாது. அ.தி.மு.க, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்" என்றார்.