வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (05/10/2018)

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த பல்லாங்குழி, தாயம் போட்டிகள்!

நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பாக, முதியோருக்கான பல்லாங்குழி, தாயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 

அருங்காட்சியகம் சார்பாக போட்டிகள்

நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகம் பாளையங்கோட்டையில் செயல்பட்டுவருகிறது. பழங்கால கலைப்பொருள்கள், பழங்கால நாணயங்கள், ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி, பழங்கால கற்சிலைகள் உள்ளிட்ட அரிய பொருள்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதனால், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தருவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

அருங்காட்சியகத்தின் சார்பாக முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அரசு அருங்காட்சியகம் இன்னர்வீல் கிளப் ஆஃப் திருநெல்வேலி ஆகியவை இணைந்து 45 வயதுக்கு  மேற்பட்ட பெண்களுக்கான பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. முதியோரை உற்சாகப்படுத்துவதுடன், அவர்களை கெளரவிக்கும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 

முதியோருக்கான இந்தப் போட்டியில், பாரம்பர்ய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், கழங்கு ஆகியவை இடம்பெற்றிருந்தன. பழங்கால நினைவுகளைச் சுமந்தபடியே இதில் பங்கேற்ற முதியோர்கள் ஆர்வத்துடன் விளையாடினார்கள். அத்துடன், நினைவுத்திறன் போட்டி, பொது அறிவுப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி செய்திருந்தார். இன்னர்வீல் கிளப் தலைவர் பிச்சம்மா ஆறுமுகம் நடுவராகப் பங்கேற்ற மங்களாதேவி, மரிய செல்வமேரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.