வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (05/10/2018)

`பேரிடரைச் சமாளிக்க 24 மணி நேரக் கண்காணிப்புக்குழு’ - தயார்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம்

நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர் நிலவரங்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாகவும், மாவட்டத்தில் 17 இடங்களில் துணை ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மழை

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகிவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகத் தொடர்மழை பெய்து வருகிறது. 5-ம் தேதி காலை நிலவரப்படி பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நெல்லையில் 68 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. அவற்றை அகற்ற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 4-ம் தேதி இடியுடன்கூடிய கனமழை பெய்த நிலையில் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் இடி விழுந்ததால், சேட்டிலைட் இணைப்புகள், மின்வசதி, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சிறிது நேரத்துக்குப் பின்னர் அவை சரிசெய்யப்பட்டன.

பேரிடர் மீட்பு - மாவட்ட ஆட்சியர் இந்த நிலையில், பேரிடரை எதிர்கொள்வது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ``நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. மாவட்டத்தில் மிக அதிக பாதிப்பு ஏற்படும் பகுதியாக 11 இடங்களும், அதிகமாகப் பாதிப்பு உள்ளாகும் 44 இடங்களும் உட்பட 125 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

மாவட்டத்தின் 16 தாலுகாக்களில் 17 இடங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன அவர்கள் 24 மணிநேரமும் அந்தந்த தாலுகாக்களில் பணியில் இருப்பார்கள், பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற காவலர்கள், தீயணைப்புத் துறையினர் என 237 பேர் மீட்புப் பணிகள் மேற்கொள்ள ஆயத்தநிலையில் உள்ளார்கள். 

இது தவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,300 பேர் தகவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டப் பகுதிகளில் நடக்கும் தகவல்களை மாவட்ட நிர்வாகத்துக்கும் மாவட்ட நிர்வாகம் தரும் தகவல்களை மக்களிடமும் கொண்டு சென்று சேர்ப்பார்கள். மழைப்பாதிப்புகள் குறித்து பொதுமக்களும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மழைக்காலப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. இதற்காக அனைத்துத் துறைகளின் பணியாளர்களும் தயாராக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.