வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:26 (06/10/2018)

தினகரன் வெளியிடப்போகும் ரகசியம்...சரண்டரான ஓ.பி.எஸ்!

பன்னீர்செல்வம்

“தற்போதுதான் குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. இனி யாருக்கு நல்ல நேரம், யாருக்கு கெட்ட நேரம் எனத் தெரியவரும்”  என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர் சொல்லி 24 மணிநேரத்தில், பன்னீர்செல்வத்துக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டார் தினகரன். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம், தினகரன் குறித்தும், சசிகலாவின் குடும்பம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் தினகரன் காதுக்கு எட்டியுள்ளது. அப்போதே டென்ஷனாகியுள்ளார் தினகரன்.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக, பன்னீர்செல்வத்தின் நண்பர் தினகரனைச் சந்தித்து, “உங்களைச் சந்திக்க பன்னீர்செல்வம் விரும்புகிறார்” என்று தகவலைச் சொல்லியுள்ளார். 'கொஞ்ச நாள்கள் சென்றபிறகு சந்திப்பை நடத்தலாம்' என்று தினகரன் தரப்பில் அப்போது சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே தினகரனுக்கு எதிராக பன்னீர்செல்வம் பொங்கி எழுந்ததும் டென்ஷனாகிவிட்டார் தினகரன். பன்னீர் குறித்துப் பேசிய தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். நம்மிடம் தூதுவிட்டுக்கொண்டே நம்மைத் திட்டுகிறாரா? அவருக்கு பாடம் புகட்டாமல் விடக்கூடாது” என்று சொல்லியுள்ளார். அதன்பிறகுதான், பன்னீர்செல்வம் தன்னை சந்தித்த விஷயத்தை வெளியிட்டு பன்னீருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். 

அதேநேரம், `ரகசியம் ஒன்றும் இருக்கிறது’ என்று தினகரன் கூறியது பன்னீரை பதட்டமாக்கிவிட்டது என்கிறார்கள். தினகரனை சந்தித்த விஷயம் இப்போது வெளியானது, கட்சிக்குள்ளும் அவரது இமேஜ் சரியத்துவங்கிவிட்டது. அதேபோல, பன்னீர் சம்பந்தப்பட்ட போட்டோ ஒன்றைத்தான் ரகசியம் என்று தினகரன் சொல்லிவருகிறார். `அந்த போட்டோவை வெளியிட்டால், பன்னீர்செல்வத்தின் நிலை இன்னும் சிக்கலாகிவிடும்’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். அந்தத் தகவல் பன்னீர்செல்வத்துக்குத் தெரிந்துதான், தினகரனிடம் சரண்டராகும் வகையில் சந்திப்பை ஒத்துக்கொண்டுவிட்டார் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு சில நாள்களில், அடுத்தடுத்த அதிரடித் திருப்பங்கள் அ.தி.மு.க-வில் ஏற்படப்போவது தெரிகிறது.