வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:22:00 (05/10/2018)

கோவில்பட்டியில் சபரிமலை தேவசம் போர்டு, கேரள மாநில அரசைக் கண்டித்து நூதன போராட்டம்!

கேரள மாநில அரசு மற்றும் சபரிமலை தேவசம் போர்டை கண்டித்து, கோவில்பட்டியில் பாரதிய கிசான் சங்கத்தினர் தரையில் முட்டிக்கால் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம்

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பசாமி கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்குப் பல அமைப்பினர்களிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது. சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கேரள அரசு செய்துவருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கான பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் பெண் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என அம்மாநில காவல் துறையும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பாரதிய கிசான் சங்கத்தினர் சபரிமலை தேவசம் போர்டு மற்றும் கேரள மாநில அரசைக் கண்டித்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முட்டிக்கால் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து பாரதீய கிசான் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரெங்கநாயகலு பேசுகையில், " சபரிமலை ஐயப்பசாமி கோயிலில் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தேவசம்போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை.  அதைக் கண்டித்தும், தொடர்ந்து கேரள அரசு இந்து மத நம்பிக்கைக்கு எதிராகவே செயல்பட்டுவருகிறது. அதை  மாற்றிக்கொள்ள வேண்டும்,

இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களின் மரபுகள், ஆகம விதிகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி, இந்த முட்டிக்கால் போராட்டத்தை நடத்துகிறோம்" என்றார். இந்தப் போராட்டத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் முட்டிக்கால் போட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை கோட்டாட்சியரின்  நேர்முக உதவியாளர் சூரிய கலாவிடம்  அளித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க