வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (05/10/2018)

கடைசி தொடர்பு:22:05 (05/10/2018)

``களத்துலதான் இருக்கேன் அண்ணே’’ - ஊழல் விவகாரத்தில் வேலுமணிக்கு ஆதாரத்தோடு பதிலளித்த உதயநிதி..!

ஊழல் விவகாரத்தில், அமைச்சர் வேலுமணியின் கருத்துக்கு, உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

வேலுமணி உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், ``அம்மா வழியில் ஆட்சி நடக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிவருகிறார். இந்நேரம் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பெங்களூரு சிறையில்தான் இருந்திருப்பார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இப்போது அமைச்சர்களாக உள்ளவர்கள் அப்போது சிறையில் இருப்பார்கள். கோவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவர் எஸ்.பி.ஊழல்மணி. அவர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித் துறையில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. கோவையில் உள்ள 8 குளங்களில் ஆகாயத்தாமரை அகற்றுகிறேன் என்ற பெயரில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது’’ என்று தமிழக அரசு மீதும், அமைச்சர் வேலுமணி மீதும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார். செய்தியாளர் ஒருவர் உதயநிதி பேசிய வீடியோவை ட்விட்டரில் ஸ்டேட்டஸாகப் போட்டிருந்தார். மேலும், அந்த ட்வீட்டில் அமைச்சர் வேலுமணி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டேக்கும் செய்திருந்தார்.

இதற்கு, “நீங்க க(கு)ளத்தில் இறங்கிப் பார்த்து பேசுங்க தம்பி. அப்படியே பேசறீங்களே சரி பார்க்காமல்! வாங்களேன் எங்க ஊர் குளங்களை பார்க்க. தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கிறது. கோவை ஒரு முன் உதாரணம் எனத் தமிழ்நாட்டுக்கே தெரிந்திருக்கிறது” என்று அமைச்சர் வேலுமணி, ட்விட்டரில் பதிலளித்திருந்தார்.

டவீட்

இதைத்தொடர்ந்து, “நான் எப்பவுமே களத்துலதான் இருக்கேன் வேலுமணிண்ணே. உங்கள் ஊழல் குளம் கோவையில இருப்பதற்கான ஆதாரத்தைப் போட்டோவா போட்டிருக்கேன். தமிழ்நாட்டில் கோவையை ஊழலுக்கே முன்னுதாரணமாகக் கொண்டு வந்தவர் நீங்கள். விரைவில், நீதிமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் பதில் சொல்லத் தயாராக இருங்கள்” என்று கோவை குளங்களின் நிலையைப் புகைப்பட ஆதாரங்களுடன் ட்விட்டரில் வெளியிட்டு பதிலளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்