வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (05/10/2018)

`புதுச்சேரி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது!’ - கனமழை எச்சரிக்கையால் முதல்வர் உத்தரவு

வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால் `7-ம் தேதி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது’ என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

நாராயணசாமி

அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை இருக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “கன மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கிருந்து தண்ணீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித்துறை மற்றும்  பொதுப்பணித் துறையினரை ஒருங்கிணைத்து 24 மணி நேரம் செயல்படு வகையில் கட்டுப்பாட்டு அறை ஒன்றைத் தொடங்கி, அதில் வரும் புகார்கள் மீதான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறேன். மொஹரம் பண்டிகைக்கு விடப்பட்ட விடுமுறையால் நாளை (05.10.2018) அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கனமழை காரணமாக அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்துக்கும் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற 7-ம் தேதியன்று 25 செ.மீட்டருக்கும் மேலாகக் கனமழை இருக்குமென வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. அதனால் அன்றைய தினம் அரசு ஊழியர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க