`தமிழகத்தில் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லை!’ - ஹெச்.ராஜா | H Raja speaks about Hydro carbon projects in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:23:00 (05/10/2018)

`தமிழகத்தில் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லை!’ - ஹெச்.ராஜா

தமிழகத்தில் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லை என பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.

ஹெச்.ராஜா

திருவையாறு சட்டமன்றத் தொகுதி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க-வின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ``மத்திய பா.ஜ.க அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இலவச கேஸ் இணைப்பு, முத்ரா திட்டத்தில் தமிழக மக்கள் நல்ல பயனை அடைந்துள்ளார்கள். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து தமிழக மக்களிடம் நேரில் விளக்கிச் சொல்வதற்கும், பிரதமர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லவும் பா.ஜ.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் வீதம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 சுற்றுகளாகச் சென்று மத்திய அரசு கொண்டு வந்தத் திட்டங்கள், அவற்றில் எவ்வளவு பேர் பயனைடைந்துள்ளார்கள் என்பது குறித்து விளக்கிச் சொல்ல திட்டமிட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், பா.ஜ.க தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். ஐயப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்வது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்ப பக்தர்கள் பலர் சீராய்வு மனு மூலம் இதற்குத் தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.  

தமிழக இந்து சமய அறநிலையத்துறை, தனியாருக்குச் சொந்தமான இந்துக் கோயில்களை கைப்பற்றியும், பழங்கால கடவுள் சிலைகளைக் கடத்தி விற்றும், இந்துக்களுக்கும் இந்து தர்மத்துக்கும் விரோதமான துறையாக நடந்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு, காப்பீட்டுத் தொகை கிடைக்க அந்தத் துறையின் அமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு 51 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. காரைக்காலில் கடலுக்கு அடியில்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. கரையில்கூட இல்லை. அப்படி இருக்கும்போது விவசாயம் எப்படி பாதிக்கப்படும். தமிழகத்தில் இருப்பவர்கள் எல்லாம் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டின் முழு எரிசக்தித் தேவையும் ஹைட்ரோ கார்பனில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது. உலக அளவில் அந்த நாடு விவசாயத்தில் முன்னோடியாகவும் விளங்கி வருகிறது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் இஸ்ரேல் என்ன பாலைவனமாக மாறிவிட்டதா? இங்கு பகுத்தறிவு பேசிக்கொண்டு மூட நம்பிக்கையைப் பரப்புகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க