வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (05/10/2018)

கடைசி தொடர்பு:23:45 (05/10/2018)

`ஐயப்பன் கோயிலுக்குப் பெண் பக்தைகளை அழைத்துச் செல்லமாட்டோம்!’ - உறுதிமொழி எடுக்கும் கரூர் பக்தர்கள்

``கரூர் மாவட்டத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது தொடங்கி 50 வயது வரை உள்ள பெண்களை அழைத்துப் போகமாட்டோம். இது சத்தியம்’’ என்று கரூர் மாவட்ட அனைத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர் உறுதிமொழி எடுக்க இருக்கிறார்கள்.

ஐயப்ப பக்தர்கள் உறுதிமொழி

ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இதுநாள் வரை 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக் கூடாது என்ற தடை இருந்தது. இதுதொடர்பான வழக்கில், 'எல்லா வயதுடைய பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதை ஆதரித்தும் எதிர்த்தும் நாடு முழுவதும் பல அமைப்புகள் கருத்துச் சொல்லி வருகின்றன.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர் நாளை (சனிக்கிழமை) கரூர் ஈஸ்வரன் கோயில் முன்பு கூடி, 'ஐயப்பன் கோயிலுக்கு பெண் பக்தைகளை எக்காரணம் கொண்டும் அழைத்துச் செல்ல மாட்டோம்' என்று உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள். இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்,

``ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயதுடைய பெண்கள் போகக் கூடாது என்பது ஆகம விஷயமாகக் கருதப்படுது. தேவசம் போர்டால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதிகம், பாரம்பர்ய விஷயமாகவும் அது உள்ளது. தீட்டு என்கிற வகையிலும், ஐயப்பனே அந்த வயது இடைவெளிகளில் உள்ள பெண்களை, தனது சந்நிதிக்கு அனுமதிக்கக் கூடாது என்று விரும்புவதாகவும் பார்க்கப்படுது.

இந்தச் சூழலில், திடீர்னு உச்ச நீதிமன்றம், 'எல்லா வயதுடைய பெண் பக்தைகளும் ஐயப்பன் கோயிலுக்குப் போகலாம்'னு சொல்லி, பல கோடி பக்தர்களின் நம்பிக்கையைக் குறைத்திருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றமே சொன்னாலும், கரூர் மாவட்டத்திலிருந்து 10 முதல் 50 வயதுடைய ஒரு பெண் பக்தையைக்கூட ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துப் போகக் கூடாதுன்னு ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கூடி முடிவெடுத்துள்ளோம். அதோடு, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை பண்ணணும்னும் கேட்டுக்கொள்கிறோம். இந்தத் தீர்ப்பால் எங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைக் காண்பிக்கவும், பாரம்பர்யத்தைக் காக்கவும் அனைத்து ஐயப்ப பக்தர்கள் அமைப்புகளும் சேர்ந்து ஈஸ்வரன் கோயில் முன்பு உறுதிமொழி எடுக்கப்போகிறோம். சிவன் முன்பு நாங்க எடுக்கும் இந்த உறுதிமொழியை எக்காரணம் கொண்டும் மீறமாட்டோம். இது சத்தியம்!" என்றார்கள் அதிரடியாக.