வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:07:04 (06/10/2018)

``ஆளுக்கு 10 தி.மு.க ஓட்டு வாங்கித் தரணும்!” - ஸ்கூட்டி கொடுத்துவிட்டு கைமாறு கேட்ட அமைச்சர்

அமைச்சர்

ஈரோட்டில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 343 பயனாளிகளுக்கு ரூ.85.75 லட்சம் மதிப்பிலான மானிய விலையிலான ஸ்கூட்டர்களை வழங்கினர்.

ஈரோட்டில் அரசுக்குச் சொந்தமாக இடங்கள் இருக்க, ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஸ்கூட்டர் வழங்கும் விழாவை வைத்திருந்தனர். காலையிலேயே மகளிர் அனைவரும் ஸ்கூட்டியோடு ஆஜர் ஆக, அதை வரிசைகட்டி நிற்க வைத்து வழக்கம்போல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு மைக் பிடித்து, ``என் மனைவியோடு ஒருதடவை பைக்ல வெளியே போயிட்டு வீட்டுக்கு திரும்புறப்ப, மனைவி பைக்ல ஏறிட்டாங்கன்னு நினைச்சி நான் தெரியாம வீட்டுக்கு வண்டியை ஓட்டிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் அவங்க கஷ்டப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. அந்த மாதிரி இனி கஷ்டப்படத் தேவையில்லை. அம்மா ஸ்கூட்டர் கொடுத்தாச்சு. இனி நீங்க யாரையும் எதிர்பார்க்காம சர்ன்னு போயிட்டு வரலாம்” எனப் பேசி முடிக்க, என்ன ரியாக்‌ஷன் கொடுப்பது எனத் தெரியாமல் பெண்கள் நெளிந்தனர்.

அமைச்சர்

அமைச்சர் கே.சி.கருப்பண்ணனோ, ``பெண்களுக்கென தனி காவல் நிலையம், பெண்கள் மேம்பாட்டுக்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மானிய விலையில் ஸ்கூட்டர் என பெண்களுக்காக பல திட்டங்களை அம்மா கொடுத்திருக்கிறார். அதற்கு கைமாறாக தேர்தல் நேரத்தில் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நீங்க ஓட்டுப் போடுறது மட்டுமில்லாம, தி.மு.க கட்சிக்காரங்க 10 பேர்கிட்ட அம்மாவோட இந்தச் சாதனையை எடுத்துச் சொல்லி, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்க” என பேசி முடிக்க, ஏற்கெனவே பசியில் இருந்த மகளிர் கூட்டம் மேலும் கிறுகிறுத்துப் போயினர். 

``எப்படா ஸ்கூட்டியை கொடுப்பாங்க... வீட்டுக்கு போகலாம் என நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. பார்த்து பத்திரமாக வீட்டுக்கு போங்க!” என சுருக்கமாக தன்னுடைய பேச்சை அமைச்சர் செங்கோட்டையன் முடிக்க, ‘அப்பாடா!’ என கூட்டம் பெருமூச்சி விட்டது.

அமைச்சர்

நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ``நவம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். தமிழகத்திலுள்ள 670 பள்ளிகளில் அதிநவீன விஞ்ஞான ஆய்வுக்கூடமான `அடல் லேப்’ கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 6 அரசுப் பள்ளிகளுக்கு தேசிய சிறந்த தூய்மைப் பள்ளி விருது கிடைத்திருந்தாலும், மொத்தமுள்ள 57,000 அரசுப் பள்ளிகளும் தூய்மையாகத்தான் இருக்கின்றன.” என்றார்.