வெளியிடப்பட்ட நேரம்: 04:03 (06/10/2018)

கடைசி தொடர்பு:07:12 (06/10/2018)

``தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளைக்  கண்காணியுங்கள்!” மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில தினங்களுக்குத் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 7 -ம் (நாளை) தேதி அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மீட்புப்படையினர் அனுப்பட்டுள்ளனர். அனைத்து அரசு அதிகாரிகளும் மழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் நிலைகள்

இந்த நிலையில் மத்திய நீர் ஆணையம், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ``தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமும் அடுத்த 5 நாள்கள் தமிழகம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளைக்  கண்காணிக்க வேண்டும். குறிப்பாகச் சிறிய அணைகள் மீது கூடுதல் கவனம் தேவை. பொன்னியாறு, வெள்ளாறு, பாலாறு மற்றும் கொசஸ்தலையாறு ஆகியவற்றைத்  தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய நீர் ஆணையத்தின் கடிதம்

மத்திய நீர் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கும், பேரிடர் மேலாண்மை செயலாளருக்கும், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.