வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (06/10/2018)

கடைசி தொடர்பு:09:00 (06/10/2018)

`கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாகப் பாராட்டியிருப்பார்’- ஸ்டாலின் நெகிழ்ச்சி

``கலைஞர் பார்த்திருந்தால் பரியனைக் கொண்டாடியிருப்பார்'' என `பரியேறும் பெருமாள்' படம் பார்த்துவிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

சமீபத்தில் வெளியாகி, அனைத்து தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற படம் பரியேறும் பெருமாள். பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் நடிப்பில் உருவான இந்தப்படம், மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. `பரியேறும் பெருமாள்' படத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று பார்த்தார். உடன் துர்கா ஸ்டாலின், உதயநிதி , கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர். படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டிய ஸ்டாலின், ``கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாகப் பாராட்டியிருப்பார். சில வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம். திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று வாழ்த்தினார்.

இதுகுறித்து மாரி செல்வராஜ் தனது முகநூலில், ‘பரியேறும் பெருமாள் திரைப்படத்தைப் பிரியத்தோடு பார்த்து பெரும் நெகிழ்ச்சியோடு பாராட்டிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எங்கள் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.