வெளியிடப்பட்ட நேரம்: 08:18 (06/10/2018)

கடைசி தொடர்பு:11:52 (06/10/2018)

ஒரு மாதம் ஆகியும் கண்டுபிடிக்கப்படாத ஹரிணி பாப்பா... கதறும் நாடோடி பெற்றோர்! #FollowUp

``அன்னிக்கு எதுக்கு சார் ஆட்டோ லைட்டு ரிப்பேர் ஆகணும். அதுமட்டும் சரியா இருந்திருந்தா, பொண்டாட்டி புள்ளயோட வூடு போய் சேந்துருப்பேன்”

ஹரிணி பாப்பா

``ரிணி எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுடுவோம்!"

கடந்த 23 ம் தேதி ``புள்ள கிடைக்கலைனா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்” கலங்கும் நாடோடி பெற்றோர்! என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். 15 நாள்களை நெருங்கிய நிலையில் இன்றளவும் ஹரிணி கிடைத்தபாடில்லை. 

பாசி, ஊசி மணி விற்பது வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதியின் பிழைப்பு. அன்றும் வழக்கம்போல் பிழைப்புக்காக பஸ் ஏறி இருக்கிறார்கள்.

``காளியம்மா, புள்ளயைத் தூக்கிக்க. போய் வியாபாரத்தை முடிச்சுட்டு வந்துடலாம்” என்றார். `அடுத்த இரண்டு நாளைக்குப் பிள்ளையின் பால் செலவுக்கு ஆச்சு' என்று காளியம்மா பூரிப்புடன் தயாராகி, கடை விரிக்கத் தேவையான அனைத்துச் சாமான்களையும் மூட்டை கட்டினார். தூங்கிக்கொண்டிருந்த தன் செல்ல மகள் ஹரிணியைத் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறினார். பயணத்தின் தூரத்தைக் கடக்கும் வழி நெடுக, மகளின் எதிர்காலம் பற்றிய எத்தனை எத்தனையோ கனவுகளை இருவரும் சுமந்தார்கள். ஆனால், வசந்தகாலமாகத் தொடங்கிய அன்றைய நாளின் முடிவில், ஒரு பெரும் இழப்பைச் சந்திக்கப்போவது அந்த ஏழைப் பெற்றோர்க்குத் தெரியாது.

உத்திரமேரூருக்கு அடுத்துள்ள மானமதி கிராமம்தான் வெங்கடேசன் காளியம்மாள் தம்பதிக்கு. நாடோடி இனம். தினமும் ஊர்விட்டு ஊர் சென்று பொம்மைகள், பாசி, மணிகள் விற்பது தொழில். அன்று, கடப்பாக்கம் அருகேயுள்ள இடைக்கழிநாடு கிராமத்தின் அம்மன் கோயில் திருவிழாவில் வியாபாரம் நடத்தச் சென்றார்கள். திருவிழாவுக்கு வரும் கூட்டத்தைப் பொறுத்து வியாபாரம். அதிகபட்சம் 250 ரூபாய் கிடைக்கலாம்.

ஹரிணி பெற்றோருடன்

ஹரிணி அன்றைக்கு ரொம்பவே சுட்டித்தனம் பண்ணியதாக காளியம்மாள் சொல்கிறார். ``என்னைக்கும் எம் புள்ள துறுதுறுன்னுதான் இருக்கும். அன்னிக்கு இன்னும் ரொம்ப சேட்டை. அங்கேயும் இங்கேயும் திரிஞ்சுட்டே இருந்துச்சு. அடிக்கடி ஓடிவந்து என் வயித்தைத் தொட்டு, `அம்மா, தம்பி பாப்பா எப்ப வரும்? அவனுக்கு ஒரு பொம்மை எடுத்து வெச்சிருக்கே'னு சொன்னா. ஹரிணி நல்லா பாடும். ஆடிக்கிட்டே திரியும். அவளுக்குப் புடிச்சதை வாங்கிக்கொடுக்க இருந்தேன். ஆத்தா புண்ணியத்துல அன்னிக்குக் கையில நல்ல காசும் நின்னுச்சு. திருவிழா முடிஞ்சதும் ஊருக்குக் கிளம்பிட்டோம். ராவு நல்லா இருட்டிடுச்சு. ஆட்டோவில் லைட்டு வேலை செய்யலை. `இனிமே வண்டியை ஓட்டறது சிரமம். எங்கேயாச்சும் படுத்துட்டு காலையில் போலாம்'னு வீட்டுக்காரரு சொன்னார். போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே படுத்துட்டோம்'' என்கிறார்.

``அன்னிக்கு எதுக்கு சார் ஆட்டோ லைட்டு ரிப்பேர் ஆகணும். அதுமட்டும் சரியா இருந்திருந்தா, பொண்டாட்டி புள்ளயோட வூடு போய் சேந்துருப்பேன். தூரத்துல இருக்கிற ஊர்களில் எல்லாம் தங்கிட்டு வந்திருக்கோம். எங்களுக்கா இப்படி ஒரு நிலைமை. பாவம் காளியம்மா. உண்டாகியிருக்கு. ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல குந்திக்கின்னு இருக்கோம். அசிங்கமா இருக்குதுங்க சார்” என்கிறார் வெங்கடேசன். 

காளியம்மாவும் வெங்கடேசனும் மாறி மாறி கண்ணீர்விட்டுக் கதறுகிறார்கள். ``ஏழையாகப் பொறந்துட்டா. இப்படித்தான் அநாதையா நிக்கணுமா சார்? போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல உக்காந்துகின்னு பிச்சை கேட்டுட்டு இருக்கோம். தயவு காட்டுங்க சார். எங்களைப் பார்த்தா பாவமா இல்லியா” என்ற கதறல் பெரும் இடிபோல் விழுகிறது.

பால் மணம் மாறாத பிஞ்சு ஹரிணி, இப்போது எங்கே இருக்கிறாள். இதோ, ஒரு மாதம் ஆகப்போகிறது தன் பெற்றொரிடமிருந்து அவள் பிரிந்துசென்று. எந்நேரமும் பொம்மைகளோடு ஆடிப்பாடி விளையாடுபவள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? “சாப்ட்டியா என் செல்லமே, அம்மா பக்கத்துல இல்லாம தூங்கினியா கண்ணு” என ஹரிணி பற்றிய சிந்தனையிலேயே இருக்கும் காளியம்மாவுக்கு இந்தச் சமூகம் என்ன பதிலைத் தரப்போகிறது. என்னதான் ஆனது?

ஹரிணி தந்தை வெங்கடேசனுடன்

``நாங்க விசாரிச்சுட்டுதான் சார் இருக்கோம். ஹரிணி தொலைஞ்ச புகார் வந்ததிலிருந்தே மீட்கும் முயற்சியைத் தீவிரமாக்கி இருக்கோம். சென்னை உயர் நீதிமன்றத்திலும் பெற்றோர் தரப்புல ஆட்கொணர்வு மனு போட்டிருக்காங்க. தேடும் வேட்டையைத் துரிதப்படுத்தியிக்கோம். எங்களுக்குக் கிடைச்ச சிசிடிவி ஃபுட்டேஜ்களை வெச்சு, சந்தேகப்பட்ட நபர்களைக் கைது பண்ணி விசாரணையைத் தொடங்கிட்டோம். சீக்கிரமே கண்டுபிடிச்சிடுவோம்” என்கிறார், அணைக்கட்டு காவல் நிலைய உதவிக் காவல் ஆய்வாளர், முரளி. 

அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தோம். ``ஹரிணி காணாமல்போய் ஒரு மாதம் ஆகப்போகிறது. ஆனால், அவளுக்குப் பிறகு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள் காணாமல்போய், ஒரே இரவில் மீட்கப்பட்டார். ஏன் ஹரிணியை மட்டும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை'' எனக் கேட்டதும், ``சார் எனக்கு வேற வேலை இருக்கு. அப்புறமா கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டார். 

மழை இல்லாத அந்நாள் வெங்கடேசன் காளியம்மாள் தம்பதிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது மழை ஆரம்பித்திருக்கிறது. பிழைப்புக்கு வழியின்றி பிள்ளையின் நினைவைச் சுமந்துகொண்டு காவல் நிலையத்தின் வாசலிலேயே கிடக்கிறார்கள். மழையால் மண் குளிர்ந்ததுபோல மகளின் வரவால் அந்த இரு உள்ளமும் குளிரட்டும்.


டிரெண்டிங் @ விகடன்