வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (06/10/2018)

கடைசி தொடர்பு:14:56 (06/10/2018)

28 பயணிகளுடன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து! - இரவில் திம்பம் மலையில் நடந்த பயங்கரம்

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதையில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பேருந்து நேற்று இரவு வந்துகொண்டிருந்தது. இரவு 8.30 மணியளவில் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்து இறங்கிக் கொண்டிருக்க, லேசாக தூறிய மழை மற்றும் பனிமூட்டத்தால் சாலை மங்கலாகத் தெரிந்திருக்கிறது. 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது. பயணிகளுடன் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், விபத்து நடந்த பகுதிக்கு ஓடிச்சென்று பார்க்க, பயணிகள் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்க, சற்று நேரத்தில் போலீஸார், தீயணைப்புப் படையினர், 108 ஆம்புலன்ஸுகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கின்றனர்.

100 அடி பள்ளத்தில் விழுந்த அரசு பேருந்து

பள்ளத்தில் கிடந்த பேருந்தில் விளக்குகள் மின்னியதைக் கண்டு, பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்புப் படையினர், பேருந்தில் சிக்கி படுகாயமடைந்த கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு மேலே கொண்டு வந்தனர். படுகாயமடைந்த பயணிகள் பலரும் கயிற்றைப் பிடித்து மேலே ஏற சிரமப்பட, தீயணைப்புப் படையினர் அவர்களை மேலே ஏற்றிவிட்டனர். பேருந்தின் நொறுங்கிய பகுதியில் சிக்கியிருந்த பயணிகள் சிலரை மீட்க முடியாமல் தீயணைப்புப் படையினர் திணறினர். கடும் பனிப்பொழிவு மற்றும் சாரல் மழைக்கு இடையே ஒரு வழியாக, பேருந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த மற்ற பயணிகளும் மீட்கப்பட்டனர். பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும், உயிர்ப்பயம் உதறலாகத் தெரிந்தது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 25 பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். இரவு நேரம் என்பதால் பேருந்தில் குறைவான பயணிகளே இருந்திருக்கின்றனர். பகல் நேரத்தில் இதுபோன்ற விபத்து நடந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். பேருந்தை வேகமாக இயக்கியதுதான் விபத்துக்குக் காரணம் என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். இந்த விபத்து சம்பந்தமாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்றும், விபத்துக்குள்ளாகியும் வருகின்றன. திம்பம் மலைப்பாதையின் பெரும்பாலான வளைவுப் பகுதிகளில் தடுப்புச் சுவர் இல்லாமல் இருக்கிறது. மேலும், பல இடங்களில் சாலைகள் பெயர்ந்தும், பெரும் பள்ளங்களாகவும் இருக்கின்றன. இதுபோன்ற விபத்துகள் இனி நேராமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் சாலைகளை சீரமைத்தும், வாகன ஓட்டிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.