வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (06/10/2018)

கடைசி தொடர்பு:13:20 (06/10/2018)

ரெட் அலர்ட் எதிரொலி! தூத்துக்குடியைக் கண்காணிக்கும் கடலோரக் காவல்படை

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையை மீறி மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்களா என, கடலோரக் காவல்படை போலீஸார் ரோந்துப் படகுகள் மூலம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

 கடலோரக் காவல்படை

தமிழகத்தில் நாளை அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 36 இடங்கள் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் தேவையான மீட்புப் பணிகளைச் செய்வதற்கு பல துறை அதிகாரிகளைக் கொண்டு 24 மணிநேரம் அலர்ட்டாக இருக்கும் வகையில் கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக தீயணைப்புத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 79 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் 5 நாள்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 8 மீனவர்களும், ரவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 பேரும் கடந்த 1-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

தற்போது வரை இந்த 18 மீனவர்களும் கரைதிரும்பாத நிலையில், அவர்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கையை மீறி தூத்துக்குடி மாவட்டக் கடல் பகுதியில் மீனவர்கள் படகுகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்களா என வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடல் பகுதியில் கடலோரக் காவல்படைப் போலீஸார். ரோந்துப் படகுகளில் 15 பேர் கொண்ட குழுவாக தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க