வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (06/10/2018)

கடைசி தொடர்பு:14:10 (06/10/2018)

`துணைவேந்தர் நியமனத்தில் பலகோடிகள் புரண்டுள்ளது’ - ஆளுநர் அதிர்ச்சித் தகவல்!

``பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணம் புரண்டுள்ளது. இதுவரை 9 துணைவேந்தர்களை நான் தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன்” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்

பன்வாரிலால் புரோகித்

சென்னை தியாகராய நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இதுவரை பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது. இதைக்கண்டு வருத்தமடைந்தேன். இதைதான் மாற்ற நினைத்தேன். துணை வேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையில்தான் நடைபெற வேண்டும்.

இதுவரை 9 துணைவேந்தர்களை நான் தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் முதல் துணைவேந்தர் வரை தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், ஆளுநரின் இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.