வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (06/10/2018)

கடைசி தொடர்பு:16:52 (06/10/2018)

``படிப்பையும் விளையாட்டையும் சமன் செய்யத் தடுமாறினேன்''- ஸ்குவாஷில் பதக்கம் வென்ற மாணவி

கார்த்தாவில் நடந்த 2018-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான ஸ்குவாஷ் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்றவர், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுனைனா குருவிலா (Sunayna Kuruvilla). அவரின் வெற்றி அனுபவத்தைப் பகிர்கிறார்.

``நடுத்தர குடும்பத்துப் பெண் நான். எம்.ஓ.பி வைஷ்ணாவில் விஸ்காம் 3 ம் ஆண்டு படிக்கிறேன். 9 வயசிலிருந்தே ஸ்குவாஷ் விளையாடறேன். இந்த வெற்றி 10 வருடத்தின் உழைப்பு. ஆரம்பத்தில் படிப்பையும் விளையாட்டையும் சமன் செய்ய நிறையவே தடுமாறினேன். தோல்வி ஏற்படும்போதெல்லாம் `ரெட்டைக் குதிரையில் சவாரி செஞ்சுட்டிருக்கோமா?'னு தோணும். அப்போதெல்லாம் என் குடும்பம்தான் சப்போர்ட் பண்ணி உற்சாகம் தருவாங்க. சீக்கிரமே படிப்பையும் விளையாட்டையும் சமன்செய்ய பழகிட்டேன். நேஷனல் லெவல் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினேன். இப்போ, என் தாய்நாட்டுக்காகப் பரிசு பெறும் வாய்ப்பு கிடைச்சிருக்கு.

ஸ்குவாஷ்

தினமும் 4 மணி நேரப் பயிற்சி, சரியான ஃபிட்னஸ் இதுதான் என்னுடைய சக்சஸ் சீக்ரெட். பொதுவாக, விளையாட்டுத் துறை  பெண்களுக்கு மாதவிடாய் ஒரு சவாலான சூழலாக இருக்கும்னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரை, மாதவிடாய் என்பது என் உடலின் ஓர் அங்கம். அது என் விளையாட்டை எந்தச் சூழலிலும் பாதிக்காது. இந்தியாவுக்காக இன்னும் நிறைய வெற்றிகளைக் குவிக்கணும். நம்பர் ஒன் ஸ்குவாஷ் பிளேயராக வரணும்'' என்றார் மகிழ்ச்சியாக.