வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (06/10/2018)

கடைசி தொடர்பு:14:09 (06/10/2018)

`அண்ணன், தம்பியான ஓபிஎஸ்‍- ஈபிஎஸ்ஸைப் பிரிக்க முடியாது!'- அமைச்சர் பாண்டியராஜன்

``தினகரனை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்தக் காரணத்தால், முதலமைச்சருடனும் கட்சிக்குள்ளும் எந்தவிதமான பாதிப்பும் வராது'' என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்  பாண்டியராஜன்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை `டான் உட்சவ்' என்னும் ஈகை வாரம் சேவா மேளா என்ற பெயரில் அனுசரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை சேத்துபட்டில் அமைந்துள்ள லேடி ஆண்டாள் பள்ளியில், தமிழகத்தைச் சேர்ந்த 100 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து சமூகத்துக்கான தங்கள் முன்னெடுப்புகளைப் பறைசாற்றும் விதமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்வி குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சேவா மேளா என்னும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.  இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இடைத்தேர்தலில் எங்களுக்கு தொண்டர்களிடம் கிடைத்த ஆதரவு தினகரனின் மனதில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் - ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு, முதலமைச்சருடனும் கட்சிக்குள்ளும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. முதல்வர் எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் அண்ணன், தம்பி போல இணக்கத்துடன் உள்ளனர்” என்றார். மேலும், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த கேள்விக்கு ``சம்பந்தப்பட்ட அதிகாரியின் பணியிடை மாற்றத்தால், கீழடி குறித்து மத்திய அரசின் இந்தியத் தொல்லியல்துறை நடத்திய ஆய்வின் அறிக்கை வர காலதாமதம் ஆகி வருகிறது. அதை விரைவில் வெளியிட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். இதுகுறித்து தமிழக அரசின் அறிக்கை மிக விரைவில் வெளிவரும். அதுமட்டுமல்லாமல் கீழடியில் கிடைத்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களைக் கொண்டு விரைவில் முதல்வர் தலைமையில் அகழ்வைப்பகம் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.