வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (06/10/2018)

கடைசி தொடர்பு:14:13 (06/10/2018)

‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்துக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலசந்திரன்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக தொடர்ந்து புயலாகவும் வலுப்பெற்று, ஓமன் கரையை நோக்கி கடந்து செல்லக்கூடும். மேலும், தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டலத்தில், மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தென் தமிழகப் பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துள்ளது.

மழை

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 12 சென்டி மீட்டர் மழை, விழுப்புரத்தில் 9 சென்டி மீட்டர் மழை, பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதம் எட்டாம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை அக்டோபர் 7-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், எதிர்பார்க்கப்பட்ட அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. இதன்காரணமாக, இது தொடர்பான எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. மீனவர்கள் குமரிக்கடல் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளுக்கு இன்றும் (அக்டோபர் 6-ம் தேதி) மத்திய மற்றும் தென் கடல் பகுதிகளுக்கு, 6, 7, 8 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை மிதமான மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.