வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (06/10/2018)

கடைசி தொடர்பு:15:33 (06/10/2018)

சென்னையில் நடுரோட்டில் படமெடுத்த பாம்பு! - வாகனத்தில் சென்றவர்கள் பீதி 

நடுரோட்டில்


சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே நடுரோட்டில் சென்ற பாம்பைப் பார்த்து அவ்வழியாகச் சென்றவர்கள் பீதியடைந்தனர். ஒரு மணி நேரம் போராடி வனத்துறையினர் பாம்பை பிடித்தனர். 

சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். அப்போது, நடுரோட்டில் பாம்பு ஒன்று சென்றதை அங்கிருந்தவர்கள் பார்த்தனர். அவர்கள், `பாம்பு, பாம்பு’ என்று சத்தமிட்டனர். இதனால், சாலையின் நடுவிலிருந்த தடுப்பில் உள்ள செடிகளுக்குள் பாம்பு சென்று மறைந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் பாம்பைத் தேடினர். அப்போது செடிக்குள் மறைந்திருந்த பாம்பின் வாலை வனத்துறையினர் சர்வசாதாரணமாகத் தூக்கினர். அதை ஆச்சர்யத்துடன் பொதுமக்கள் பார்த்தனர். பிறகு, அந்தப் பாம்பை பையில் பிடித்து கட்டிய வனத்துறையினர் கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையில் அதை விடுவதாகத் தெரிவித்தனர். 

பாம்பை வனத்துறையினர் பிடிக்கும் நிகழ்வை ஏராளமானவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்தனர். வனத்துறையினர் பாம்பைப் பிடிக்கும்போது அந்தப் பாம்பும் படம் பிடித்ததாக அங்குள்ளவர்கள் கூறினர். இதனால், அது நல்ல பாம்பு என்று அவர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ``சென்னையில் பெய்த மழையின் காரணமாக மெயின் ரோடு பகுதிக்கு பாம்பு வந்துள்ளது. தகவல் கிடைத்ததும் அதைப் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளோம். சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளோம்" என்றனர்.