வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:15:34 (06/10/2018)

ரெட் அலர்ட்டை மீறி அரிச்சல்முனையில் `ராக்கி’ படப்பிடிப்பு! - தடுத்து நிறுத்திய அதிகாரிகள் 

ரெட் அலர்ட்டுக்கு இடையே, தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நடந்துவந்த பாரதிராஜா நடிக்கும் 'ராக்கி'  சினிமா படப்பிடிப்பு, அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது.

ரெட் அலர்ட்டுக்கு இடையே தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நடந்துவந்த பாரதிராஜா நடிக்கும் 'ராக்கி'  திரைப்பட படப்பிடிப்பு, அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது.

ரெட் அலர்ட் எச்சரிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்ட 'ராக்கி' சூட்டிங்

சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் வசந்த்  நாயகனாக நடிக்கும் படம் 'ராக்கி'.  ரவீனா ரவி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாள்களாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நடந்துவருகிறது. ராமேஸ்வரம், பாம்பன் பாலம், தனுஷ்கோடி அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில், படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.

பாதியில் நிறுத்தப்பட்ட 'ராக்கி' பட சூட்டிங்

இந்நிலையில், தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நாளை 7-ம் தேதி அதிக அளவாக 24.4 செ.மீ அளவுக்கு மழை பெய்யும் என்று 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இந்த ரெட் அலர்ட்டைத் தொடர்ந்து இன்று, நாளை, நாளை மறுதினம் என 3 நாள்களுக்கு இந்த மழை நீடிக்கும் எனவும் தெரிகிறது.

இதையொட்டி, தென்மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகள், மலை இடங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள், தனுஷ்கோடி செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதனிடையே, சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்ட அரிச்சல்முனை பகுதியில், ரெட் அலர்ட்டை மீறி ராக்கி படத்துக்கான படப்பிடிப்பு இன்றும் நடந்துவந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் சுமன் தலைமையில் வட்டாட்சியர் சந்திரன், டி.எஸ்.பி மகேஷ், தனி வட்டாட்சியர் அப்துல்ஜபார் உள்ளிட்டோர் அரிச்சல்முனை பகுதிக்குச் சென்றனர். அங்கு படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த படத் தயாரிப்புக் குழுவினரிடம், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, அவர்கள் படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு அரிச்சல்முனையிலிருந்து வெளியேறினர்.