வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:05 (06/10/2018)

போலீஸை பதறவைத்த தறிகெட்டு ஓடிய திருட்டு மணல் டிராக்டர்!

ஆண்டிமடம் அருகே திருட்டு மணல் அள்ளி வந்த நான்கு டிராக்டர்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை காவல்நிலையத்துக்குக் கொண்டுச் சென்ற வழியில் நடந்த அசம்பாவிதம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                        

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் கடலூர் மாவட்டம் வெள்ளாற்றிலிருந்து அரசின் அனுமதியின்றி டிராக்டர் மூலம் மணல் அள்ளுவதாக ஆண்டிமடம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார், அய்யூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர்களையும் போலீஸார் மறித்து ஓட்டுநர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாகக் காட்டாத்தூர் கிராமம் கிழக்குத்தெருவைச் சேர்ந்த கணேசன், வெங்கடேசன், ஜெயமூர்த்தி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மணல் ஏற்றி வந்த டிராக்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

டிராக்டர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து தறிகட்டு ஓடி காவல் நிலையம் அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. இதில் டிராக்டர் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.