வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (06/10/2018)

கடைசி தொடர்பு:16:22 (06/10/2018)

`ஐ கில் யூ’- இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது மனைவி கண்ணீர் புகார்

இன்ஸ்பெக்டர் தாம்சன்

``இன்ஸ்பெக்டர் தாம்சனிடமிருந்து என்னையும் என் மகளையும் காப்பாற்றுங்கள்'' என்று கண்ணீர்மல்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரின் மனைவி ஸ்ரீஜா புகார் கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் மேற்கு பாடிகுப்பம் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த ஆறு ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறேன். என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம். அங்கு நான் வசித்தபோது இன்ஸ்பெக்டர் தாம்சன் அவரின் உறவினர் வீட்டுக்கு வந்தபோது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 2006-ம் ஆண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஆலயத்தில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. அதன் பிறகு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அன்பாக நடந்துகொண்ட இன்ஸ்பெக்டரும் கணவருமான தாம்சன், காலப்போக்கில் என்னை அடித்துத் துன்புறுத்தி கொடுமைபடுத்தினார். கணவர் என்பதால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். அவ்வப்போது சிறுக சிறுக என்னிடம் 10 லட்சம் ரூபாய், 65 சவரன் தங்க நகைகளை பல்வேறு பிரச்னைகளைக் கூறி வாங்கினார்.

அதன் பிறகு 2013-ம் ஆண்டு என்னையும் என் மகளையும் அடித்துத் துரத்திவிட்டு பல பெண்களுடன் சுற்றித் திரிந்து வருகிறார். சேர்ந்து வாழ கோரி கேட்டால் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்தார். நானும் குழந்தையின் எதிர்காலம் கருதி விட்டுவிட்டேன். கடந்த சில தினங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் தாம்சன் காசோலை மோசடி செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்ததை பார்த்தேன். இது தொடர்பாக தாம்சன் சிறை சென்றுவிட்டால் அவர் என்னிடம் வாங்கிய 10 லட்சம் ரூபாய், 65 சவரன் நகைகள் கிடைக்காமல் போய்விட்டால் என் மகளின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். தொடர்ந்து எனக்கு செல்போன் மூலம் கில் யூ என எஸ்.எம்.எஸ் அனுப்பி கொலை செய்துவிடுவதாக மிரட்டிவரும் தாம்சன் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் என்னுடைய பணம் மற்றும் நகைகளை மீட்டு தருமாறும் தாம்சனிடமிருந்து எனக்கும் என் மகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப் புகாரை விசாரிக்கும்படி அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் திருமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தாம்சன், பணம் விவகாரம் தொடர்பாக, புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். ஏற்கெனவே கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தாம்சன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பாண்டியன் அவரின் மனைவி சஜினி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது இன்னொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தாம்சனிடம் கேட்டதற்கு, `உங்களிடம் பிறகு பேசுகிறேன்' என்று கூறினார். `ஸ்ரீஜா உங்களின் மனைவியா?’ என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. 

``இன்ஸ்பெக்டர் தாம்சனின் மனைவி இறந்துவிட்டதாக அவருக்கு வேண்டப்பட்டவர்கள் தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன் அவரின் மகளும் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சூழ்நிலையில் ஸ்ரீஜா கொடுத்த புகாரை விசாரித்தால் உண்மை என்னவென்று தெரியவரும்" என்கின்றனர் போலீஸார்.