வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (06/10/2018)

கடைசி தொடர்பு:18:18 (06/10/2018)

புதிய முயற்சியில் மீன்பிடிக்கப் பார்க்கிறார் தினகரன்! - அமைச்சர் உதயகுமார் நையாண்டி

``தினகரனின் நோக்கம், கட்சிக்கோ மக்களுக்கோ நல்லது செய்ய வேண்டும் என்பது கிடையாது. தான் மட்டும் அதிகாரம் பெற வேண்டும் என்ற வெறியின் காரணமாக, இருக்கக்கூடிய அனைவர் மீதும் குற்றம் சொல்லிவருகிறார்'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

ஆர் வி உதயகுமார்

மதுரையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சிலைமான், புளியங்குளம், விரகனூர் உள்ளிட்ட 9 கிராமங்களில்   418 பேருக்கு 65 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் உதயகுமார், "தினகரன் பேசுவது முழுவதும் பொய். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகிய எங்களுக்கு மக்களிடத்தில் கிடைக்கும் செல்வாக்கைப்  பொறுத்துகொள்ளமுடியாமல் கண்டதை உளறுகிறார். தினகரனின் நோக்கம், கட்சிக்கோ மக்களுக்கோ நல்லது செய்ய வேண்டும் என்பது கிடையாது. தான் மட்டும் அதிகாரம் பெற வேண்டும் என்ற பதவி வெறி காரணமாகவும், அதிகாரப் பசியின் காரணமாக இருக்கக்கூடிய அனைவர் மீதும் குற்றம் சொல்லிவருகிறார். ஒன்றரைக் கோடி தொண்டர்களும் என் வீட்டில் தவம் இருக்கிறார்கள் என்று சொல்லுவார். யாரும் அவரது வீட்டில் தவம் கிடக்கவில்லை. குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் பழைய முயற்சியையே இவர் புதிதாகச் செய்கிறார். தினகரன் என்னதான் முயற்சி எடுத்தாலும், கட்சியையும் ஆட்சியையும் ஒன்றும் செய்துவிட முடியாது'' என்று தெரிவித்தார்.