வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:18:30 (06/10/2018)

` ஆர்.கே.நகர் வேற, இந்த இடைத்தேர்தல் வேற..!’ - தினகரனுக்கு சவால்விடும் கடம்பூர் ராஜூ

“அ.தி.மு.க-வுக்குத் தேர்தல் பயம் என்பது துளியும் இல்லை. எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்துதான் பழக்கம். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க பெறும் வெற்றி, தமிழகத்தில் அ.தி.மு.க-வுக்கு மிகப் பெரிய எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும்” என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடியில், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,  ”ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்வதற்காகவே பிரிந்த ஓ.பி.எஸ் அணியும், இ.பி,எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. இதுகுறித்து துனை முதல்வர் ஓ.பி.எஸ் ஏற்கெனவே தெளிவாகக் கூறியுள்ளார்.  துணை முதல்வர் ஓ.பி.எஸ், தினகரனைச் சந்திகவில்லை. அ.தி.மு.க என்பது ஒரு மாபெரும் இயக்கம். இதில் இருந்து பிரிந்தவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். பிரிந்தவர்கள் தனியாகத் துவக்கிய இயக்கங்கள் எதுவும் நிலைத்ததில்லை. பிரிந்துபோனவர்கள் தானாக மீண்டும் வந்து இணைந்ததாகத்தான் வரலாறு உள்ளது.

தினகரன் கட்சியினர் அ.தி.மு.க-வில் இணைய விருப்பம் தெரிவித்தால், முதல்வர் மற்றும் மூத்த நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் ஆட்சிக்கு எதிராக இருப்பவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தேர்தல் பயத்தில்தான் அ.தி.மு.க-வில் இதுபோன்ற பிரச்னைகள் கிளப்பப்படுவதாகக் கூறப்படுவது தவறானது. அ.தி.மு.க-வுக்கு எந்தத் தேர்தல் பயமும் இல்லை. எதிரிகளுக்கு தேர்தல் பயத்தைக் கொடுத்துதான் அ.தி.மு.க-வுக்கு பழக்கம்.

தினகரன், ஆர்.கே நகர் தொகுதியில் பெற்ற வெற்றியை வைத்து மற்ற தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்க முடியாது. அந்த ஒரு தொகுதியின் வெற்றி தமிழக அரசியலை நிர்ணயிக்காது. ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வேட்பாளராக அறிவித்ததும் ஓட்டுக் கேட்டதும் நாங்கள்தான். இரண்டாவது முறை குக்கர் சின்னத்தில் அவர் நின்றபோது, பழசை நினைத்து மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டிருக்கலாம்.

இடைத்தேர்தலின் முடிவு, பொதுத்தேர்தல் முடிவை ஒருபோதும் தீர்மானிக்காது. நடைபெற இருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.  அந்த வெற்றி, தமிழகத்தில் அ.தி.மு.க-வுக்கு மிகப் பெரிய எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்” என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க