வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/10/2018)

கடைசி தொடர்பு:19:00 (06/10/2018)

`14 ஆண்டுகள் தீர்க்கப்படாத பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு’ - தனியொருவனாகக் களமிறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

 புளியந்தோப்பில் களமிறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோட்டில் 14 ஆண்டுகளாக தேங்கிய மழை தண்ணீரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியின் முயற்சியால் அகற்றப்பட்டுள்ளதுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோட்டில் சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கிவிடும். இதனால் அவ்வழியாகச் செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். ஆனால், இன்று ரெட் அலர்ட்டை வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் புளியந்தோப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது டிகாஸ்டர் ரோட்டில் மழை நீர் தேங்கியிருப்பது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர். அப்போது, சார், இந்தச் சாலையில் 14 ஆண்டுகளாகத் தண்ணீர் தேங்கிநிற்கிறது. யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் ரவி களத்தில் இறங்கினார். 

தாயகம் கவி எம்.எல்.ஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் ரவி பேசினார். உடனடியாக எம்.எல்.ஏ-வும் அதிகாரிகளும் மாநகராட்சி ஊழியர்களிடம் தண்ணீர் தேங்குவதை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தேங்கிய மழைநீரை அகற்றினர். பிறகு, தண்ணீர் தேங்குவதற்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிந்து தண்ணீர் தேங்காமலிருக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தினர். பணிகள் நடக்கும்போது இன்ஸ்பெக்டர் ரவியும் ஊழியர்களுக்கு உறுதுணையாக இருந்தார். பணிகளைப் பார்த்த பொதுமக்கள், எம்.எல்.ஏ தாயகம் ரவி, மாநகராட்சி அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். 

 இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியிடம் கேட்டதற்கு, ``குற்றங்களைத் தடுப்பது மட்டும் காவல் பணியல்ல. சமூகப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டால் மக்களுக்கு முழுமையான சேவை செய்ய முடியும். ரோந்து பணிக்குச் சென்றபோது தண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்த்து விசாரித்தேன். உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்தேன். இதற்கு நான் மட்டும் காரணமல்ல. எம்.எல்.ஏ, அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்போடு டிகாஸ்டர் ரோட்டில் தேங்கிய மழைத்தண்ணீரை அகற்றியுள்ளோம்" என்றார்.