வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (06/10/2018)

கடைசி தொடர்பு:19:15 (06/10/2018)

தளவாய் - விஜயகுமார் ஆதரவாளர்கள் கடும் மோதல்! - களேபரமான கூட்டுறவு சங்கத் தேர்தல் நாமினேஷன்

குமரி கூட்டுறவு சங்கத் தேர்தலில், அ.தி.மு.க-வினர் இரண்டு அணிகளாக மோதுகின்றனர். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் கூடியிருந்த விஜயகுமார் எம்.பி, ஆதரவாளர்ககுக்கும் தளவாய் சுந்தரம் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோதிக்கொண்ட ஆதரவாளர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பால்வளத் துறை, ரப்பர் வாரியம், நூற்பாலை, மீனவர் கூட்டுறவு இணையம் உள்ளிட்ட சங்கங்களுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தேர்தலுக்கான நாமினேஷன் தாக்கல் இன்று நடந்தது. இதில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆதரவாளர்களுக்கும், கன்னியாகுமரி முன்னாள் மாவட்டச் செயலாளர் விஜயகுமார் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர், வேட்பாளராக அ.தி.மு.க சார்பில் திமிர்த்தியூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விஜயகுமார் ஆதரவாளரான சகாயமும் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல்செய்ய ஊர்வலமாகச் செல்ல விஜயகுமார் ஆதரவாளர்கள் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் குழுமி இருந்தனர்.

அப்போது, பால்வளத் துறை நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்காக வேட்புமனு தாக்கல்செய்துவிட்டு, தளவாய்சுந்தரம் ஆதரவாளர்கள் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அங்கு, ஏற்கெனவே குழுமியிருந்த சகாயம் ஆதரவாளர்களுக்கும் தளவாய் சுந்தரம் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பிரச்னை ஏற்பட்டதால், அங்கிருந்த விஜயகுமார் ஆதரவாளர்கள் விருந்தினர் மாளிகையின் சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடினார்கள். போலீஸார் தலையிட்டு பெரிய மோதல் ஏற்படாமல் விஜயகுமார் ஆதரவாளர்களை வெளியேற்றினர். இந்த மோதலால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சகாயம் கூறுகையில், "மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எங்கள் ஆதரவாளர்களைத் தளவாய் சுந்தரம் ஆதரவாளர்கள் தாக்கினார்கள். அவர்கள்மீது காவல் துறையும், கட்சித் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

களேபரமான கூட்டுறவு சங்கத் தேர்தல் நாமினேசன்

இதுகுறித்து தளவாய்சுந்தரம் கூறுகையில், "மீன்வளத்துறை கூட்டுறவு சங்கத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் தலைவர் வேட்பாளராக திமிர்த்தியூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். சகாயத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அவரை இன்னும் கட்சியில் சேர்க்கவில்லை. எனவே, அ.தி.மு.க-வுக்குள் கோஷ்டி பூசல் எனக் கூறக் கூடாது. பால்வளத் துறை கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு தேர்தலுக்காக நாமினேஷன் தாக்கல் செய்துவிட்டு வரும்போது, அரசு விருந்தினர் மாளிகையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை சகாயம் அழைத்துவந்ததாகக் கூறினர். அப்போது, அவர்களாகவே வெளியேறினார்கள்" என்றார்.