வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (06/10/2018)

கடைசி தொடர்பு:18:32 (06/10/2018)

ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவ் யார்? - பொன்.மாணிக்கவேலிடம் போட்டுக்கொடுத்த `இன்ஃபார்மர்' 

கிரண்ராவ் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டசிலை

சென்னை போயஸ் கார்டனில் ரன்வீர் ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டிலிருந்து சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டுவருகிறது. துல்லியமாக இந்த இடத்தில்தான் சிலைகள் இருப்பதை பொன்.மாணிக்கவேலுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார் இன்ஃபார்மர் ஒருவர். 

சென்னை சைதாப்பேட்டை ரன்வீர் ஷாவின் பங்களாவில் தொடங்கிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் சோதனை விரிவடைந்துகொண்டே செல்கிறது. ரன்வீர் ஷாவின் பண்ணை வீடுகள், அரண்மனை ஆகியவற்றில் போலீஸார் சோதனை நடத்தி 200-க்கும் மேற்பட்ட சிலைகள், கல் தூண்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முதல் ரன்வீர் ஷாவின் பெண் தோழியான கிரண்ராவ் என்பவரின் போயஸ் கார்டன் பங்களாவில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர். இவரின் வீட்டில் பள்ளம் தோண்டி சிலைகள் புதைக்கப்பட்டுள்ளதால் இரண்டு ஜே.சி.பி இயந்திரங்களுடன் அவை பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன. கல் தூண்களும் சிலைகளும் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்ட இடங்களை போலீஸார் கண்டறிந்தது எப்படி என்று விசாரித்தபோது முக்கிய தகவல்கள் கிடைத்தன. 

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ரன்வீர் ஷாவின் பங்களா, பண்ணை வீடுகளில் நாங்கள் சோதனை நடத்தும்போதே எங்களின் பட்டியலில் கிரண்ராவ்வின் போயஸ் கார்டன் பங்களா வீடும் இருந்தது. இதனால்தான் வி.வி.ஐ.பி-க்களுக்கு போலீஸ் ஐ.ஜி எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. கிரண்ராவ் வீட்டில் மட்டுமல்லாமல் இன்னும் சிலரின் வீடுகளில் நாங்கள் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆராய்ச்சியாளரான கிரண் ராவ், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஐரோப்பா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வேலை பார்த்தவர். சர்க்கரைத் தொழிற்சாலையும், சென்னை அண்ணாசாலையில் உணவகமும் நடத்திவருகிறார் கிரண்ராவ். நீண்டகாலமாக ரன்வீர் ஷாவுடன் நட்பில் இருந்துவந்துள்ளார். இவரின் போயஸ் கார்டன் வீட்டுக்குள் சிலைகள் புதைத்து வைத்திருக்கும் தகவலை எங்களின் இன்ஃபார்மர் மூலம் தெரியவந்தது. அதன்படிதான் நாங்கள் புதைக்கப்பட்ட சிலைகளைத் தோண்டியெடுத்து பறிமுதல் செய்துவருகிறோம். இந்தச் சிலைகள் குறித்து கிரண்ராவ்விடம் விசாரணை நடத்தப்படும். அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

அடுத்து யாருடைய வீடுகளில் சோதனை என்ற கேள்வியைக் கேட்டதற்கு, `பொறுத்திருங்கள். சென்னையில் முக்கியமான ஒரு வி.வி.ஐ.பி வீட்டில்தான் சோதனை நடத்தவுள்ளோம். கிரண்ராவ் பங்களாவிலிருந்து ஏராளமான சிலைகளைப் பறிமுதல் செய்துள்ளோம்' என்றார். 

இதுகுறித்து கிரண்ராவ்வின் வழக்கறிஞர் கிங்ஸ்லி சாலமன் கூறுகையில், ``பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன" என்றார்.