வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (06/10/2018)

கடைசி தொடர்பு:20:22 (06/10/2018)

சமரசம் பேச சபரிமலைத் தந்திரிகள் குடும்பத்தைச் சந்திக்கும் பினராயி விஜயன்!

சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்து, ஐயப்பன் கோயில் தந்திரி குடும்பத்தினரை திங்கள்கிழமை சந்தித்துக் கலந்துரையாட கேரள முதல்வர் பினராயி விஜயன் முடிவுசெய்துள்ளார்.

பினராயி விஜயன்


'சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சபரிமலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும், மறு சீராய்வு மனு அளிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன. இந்த நிலையில், நேற்று நடந்த கேரள மாநில சி.பி.எம் செயற்குழுக் கூட்டத்தில், சபரிமலை கோயில் தந்திரிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து அரசின் நிலைகுறித்து முதல்வர் பினராயி விஜயன் விளக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, வரும் திங்கள்கிழமை சபரிமலை கோயிலின் மூன்று தந்திரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து சமரசம் செய்ய முதல்வர் பினராயி விஜயன் முடிவுசெய்துள்ளார். அந்த சந்திப்பின்போது, பெண்களை சபரிமலைக்குச் செல்லும்படி நாங்கள் வலியுறுத்த மாட்டோம். ஆனால், கோர்ட் உத்தரவுப்படி சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு வசதி செய்துகொடுப்பது மாநில அரசின் கடமை என்பதை விளக்கிக்கூற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக, அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தந்திரி குடும்பத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.