வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/10/2018)

கடைசி தொடர்பு:22:00 (06/10/2018)

`டெங்குக்கு நோ என்ட்ரி!’ - நாகப்பட்டினம் ஆட்சியர் உறுதி

நாகப்பட்டினம் நகராட்சி, காரியாங்குடி செட்டித் தெருவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சீ.சுரேஷ்குமார் ஆய்வுசெய்தார்.

ஆய்வுக்குப் பேசிய மாவட்ட ஆட்சியர், ``கொசுக்கள் மூலம் பரவும் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நோய்பற்றிய விழிப்பு உணர்வு தேவைப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள் மற்றும் உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன்,  வீட்டு உபயோகத்துக்காக சேமித்துவைத்திருக்கும் குடிநீர்ப் பானைகளை நன்கு மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தற்காலிக கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 455 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், ஜனவரி முதல் இந்த ஆண்டில் 19 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர். கொசுப் புழு ஒழிப்பு மருந்து டெமிபாஸ் -1700 லிட்டர், புகை அடிக்கும் மருந்து -1100 லிட்டர், புகை அடிக்கும் கருவி -199 இருப்பு உள்ளன. மேற்பார்வைப் பணிக்காக 75 சுகாதார ஆய்வாளர்கள், 11 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். டெங்கு காய்ச்சல் உள்ளதா எனக் கண்டுபிடிக்கும் மையங்கள் நாகப்பட்டினம், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகள் மற்றும் அரசு மருத்துமனைகளில் காய்ச்சல் கண்டோருக்கு நிலவேம்புக் குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு சுகாதாரக் கல்வி அளிக்கப்படுகிறது. மேலும் விளம்பரப் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி மருந்து, பாம்பு கடி மருந்து போன்றவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளன” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தேவி திரையரங்கம் அருகில் நடைபெற்றுவரும் கால்வாய் தூர் வாரும் பணியைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்,  மழைநீர் தேங்காமல் விரைவாக வடியும் வண்ணம் நீர் செல்லும் வழிகளைச் சரிசெய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), வி.சண்முக சுந்தரம், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் ஏ.சுப்பிரமணின், நகராட்சி ஆணையர் (பொ) ரவிச்சந்திரன், வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.