வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (06/10/2018)

கடைசி தொடர்பு:22:13 (06/10/2018)

"குறுக்கு விசாரணையில் சிக்கிய அச்சக உரிமையாளர்... சறுக்கிய யுவராஜ் தரப்பு!" - கோகுல்ராஜ் கொலை வழக்கு

சேலம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலைவழக்கு, நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜ் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ (ஜி.கே) ஆகியோர் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வாதிட்டுவருகிறார்கள். வழக்கம்போல யுவராஜும், அவருடைய ஆட்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 1-ம் தேதி நடைபெற்ற விவாதத்தில் இருந்து...

நீதிமன்றம் சரியாக 12:15 மணிக்கு தொடங்கியதும், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ என்கிற ஜி.கே, நீதிபதியிடம்... "சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பிருந்தா இவ்வழக்கில் ஒரு சாட்சியாக இருப்பதால், அவர் நீதிமன்றத்திற்குள் வரக் கூடாது" என்றார்.

நீதிபதி, பிருந்தாவைப் பார்த்து, "நீங்க இவ்வழக்கில் சாட்சியாக இருக்கிறீர்களா?"

பிருந்தா: ''ஆமாம்.''

நீதிபதி: ''அப்படியென்றால் நீங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருக்க வேண்டும்.'' 

(அதையடுத்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பிருந்தா, நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்.)

கோகுல்ராஜ் வழக்கு வழக்கறிஞர்கள்

சாட்சி எண்:11

பெயர்: வட்டார போக்குவரத்து அலுவலர் புஷ்பலதா

வாக்குமூலத்தில் இருந்து, ''நான் சென்னை தென் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகப் பணிபுரிகிறேன். 23.12.2015-ம் தேதி, நான் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்தேன். 23.12.2015-ம் தேதியன்று, சிபிசிஐடி காவல் துறையினர் டி.என் 41 எஸ் 1564 என்ற வாகனத்தின் உரிமையாளர் விவரம் தெரிந்துகொள்வதற்கான வேண்டுகோளின் பேரில், மேற்சொன்ன வாகனம் 'திரீசூர் டிம்பர் டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று சான்று வழங்கினேன். வாகனத்தின் பதிவுச் சான்றிதழின் நகல் கொடுத்தேன். அதை காவல் துறை விசாரணையிலும் சொல்லியிருக்கிறேன்'' என்றார். (யாரும் குறுக்கீடு செய்யவில்லை)

சாட்சி எண்:12

பெயர்: வடிவேல்

(தீரன் சின்னமலைக்கவுண்டர் கட்சிக்கு நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்ததாகக் கூறப்பட்ட அச்சக உரிமையாளர் கூண்டில் ஏறினார்.)

அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி: ''நீங்க எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?''

வடிவேல்: ''சங்ககிரியில் இருந்து வந்திருக்கிறேன்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''என்ன தொழில் செய்கிறீர்கள்?'' 

வடிவேல்: ''சங்ககிரி மேட்டுக்காட்டனூரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருகிறேன்.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: ''எத்தனை ஆண்டுகளாக நடத்திவருகிறீர்கள்?''

வடிவேல்: ''15 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருகிறேன்.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: ''இந்த வழக்கைப் பற்றி தெரியுமா?''

வடிவேல்: ''வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: ''உங்களை இதற்கு முன்பு காவல் துறையினர் விசாரித்தார்களா?''

வடிவேல்: ''சிபிசிஐடி காவல்துறையினர் என்னை நாமக்கல் வரச்சொல்லி விசாரித்தார்கள்.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: (நோட்டீஸைக் காட்டி) ''இந்த நோட்டீஸை யார் அச்சடித்தது?''

வடிவேல்: ''தெரியாது.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''எங்கு இந்த நோட்டீஸ் அடித்தார்கள் என்று தெரியுமா?''

வடிவேல்: ''தெரியாது.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: (எதிரில் குற்றவாளிகள் கூண்டில் நின்றுக்கொண்டிருந்த யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் 15 பேரைக் காட்டி...) ''இவர்களில் உங்களுக்கு யாரையாவது தெரியுமா?''

வடிவேல்: (உற்றுப் பார்த்தவாறு) ''யாரையும் தெரியாது.''

கோகுல்ராஜ் தாயார் தரப்பு வழக்கறிஞர் நாராயணன்: ''குற்றவாளிகளாக உள்ள சங்கர் மற்றும் செல்வகுமார் ஆகியோர் கூறியதன் பேரில் நீங்கள்தான் தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவைக் கட்சி நிகழ்ச்சிக்கான நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்திருக்கிறீர்கள்?''

வடிவேல்: ''இல்லை.''

வழக்கறிஞர் நாராயணன்: ''எதிரிகளைக் காப்பாற்றவேண்டி எதிரிகளுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்திருக்கிறீர்கள்?'' 

வடிவேல்: ''இல்லை.''

சாட்சி எண்:13

பெயர்: சிரஞ்சீவி

(தீரன் சின்னமலைக்கவுண்டர் கட்சிக்கு பருத்தி குடோனை வாடகைக்குக் கொடுத்ததாகக் கூறப்பட்டவர்) 

வழக்கறிஞர் கருணாநிதி: ''நீங்க எங்க குடியிருக்கீங்க?''

சிரஞ்ஜீவி: ''கொங்கணாபுரத்தில் குடியிருக்கிறேன்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''என்ன தொழில் செய்றீங்க?''

சிரஞ்சீவி: ''எலெக்ட்ரிக்கல் கடை, ஹார்டுவேர் கடை, பருத்தி குடோன் நடத்திவருகிறேன்.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: ''பருத்தி குடோனில் என்ன இருக்கிறது?''

சிரஞ்சீவி: ''பருத்தி குடோனில் பருத்தி அரவைக்கு வைத்துள்ளேன்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''பருத்தி குடோனை வாடகைக்குக் கொடுத்தீர்களா?''

சிரஞ்சீவி: ''யாருக்கும் வாடகைக்குக் கொடுக்கவில்லை.''

வழக்கறிஞர் கருணாநிதி: (எதிரில் குற்றவாளிகள் கூண்டில் நின்றுகொண்டிருந்த யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் 15 பேரைக் காட்டி...) ''இவர்களில் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா?''

சிரஞ்சீவி: (அவர்களை உற்றுப் பார்த்து தலையாட்டியவாறு...) ''பார்த்ததில்லை.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: ''இந்த வழக்கைப் பற்றி தெரியுமா?''

சிரஞ்சீவி: ''இந்த வழக்கைப் பற்றி எதுவும் தெரியாது.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''இந்த வழக்கு சம்பந்தமாக காவல் துறையினர் உங்களை விசாரித்தார்களா?''

சிரஞ்சீவி: ''சுமார் 3 வருஷத்துக்கு முன்பு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்தார்கள்''.

வழக்கறிஞர் கருணாநிதி: ''இந்த வழக்கு சம்பந்தமாகத்தானே விசாரித்தார்கள்?''

சிரஞ்சீவி: ''எந்த வழக்கு சம்பந்தமாக என்னை விசாரித்தார்கள் என்று எனக்குத் தெரியாது.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: ''அப்போது, சிபிசிஐடி காவல் துறையினர் உங்களிடம் கையொப்பம் பெற்றார்களா?''

சிரஞ்சீவி: ''வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கினார்கள்.''

வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் காட்டி...) ''இது உங்கள் கையொப்பமா பாருங்கள்?''

சிரஞ்சீவி: (உற்று பார்த்து தலையாட்டியவாறு...) ''இல்லை.''

வழக்கறிஞர் கருணாநிதி: (எதிரில் குற்றவாளிகள் கூண்டில் நின்றுகொண்டிருந்த யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் 15 பேரை காட்டி...) ''இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாவது தெரியுமா?''

சிரஞ்சீவி: ''தெரியாது.''

வழக்கறிஞர் நாராயணன்: ''பருத்தி குடோனில் வியாபாரம் இல்லாததால், நீங்கள் பருத்தி குடோனை வாடகைக்கு விட்டு வந்திருக்கிறீர்கள்?''

சிரஞ்சீவி: (நீதிபதியைப் பார்த்து...) ''அது பருத்தி குடோன் இல்ல. அந்த அறையில் பருத்தி அரவை மில் வைத்திருக்கிறேன். அதை எப்படி வாடகைக்கு விட முடியும்.''

வழக்கறிஞர் நாராயணன்: ''7.6.2015-ம் தேதியன்று, சங்கர் மற்றும் செல்வகுமார் ஆகியோர் உங்கள் பருத்தி குடோனை வாடகைக்கு எடுத்து, அதில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் கலந்தாய்வுக் கூட்டத்தை அன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 2:30 மணி வரை நடத்தினார்கள். அன்று காலை 8 மணிக்கு மேற்சொன்ன இருவரும் உங்களிடமிருந்து உங்கள் பருத்தி குடோன் சாவியைப் பெற்றுச்சென்று, மீண்டும் அன்று மதியம் 2: 30 மணிக்கு உங்கள் பருத்தி குடோன் சாவியை உங்களிடம் திருப்பிக் கொடுத்தார்கள்.''

சிரஞ்சீவி: ''இல்லை.''

வழக்கறிஞர் நாராயணன்: (ஆவணங்களைக் காட்டியவாறு...) ''சங்கர், செல்வகுமார் ஆகியோரின் புகைப்படங்களை அடையாளம் காட்டி உங்களிடம் கையெழுத்துப் பெற்றிருக்கிறார்கள் காவல் துறையினர்.''

சிரஞ்சீவி: (அந்தக் கையெழுத்தைப் பார்த்து) ''இல்லை.''

வழக்கறிஞர் நாராயணன்: (நோட்டீஸைக் காட்டி...) ''விஷ்ணு குடோன், பெரிய மாரியம்மன் கோயில் வீதி, கொங்கணாபுரம் என்ற முகவரி உங்களுடையது தானே?''

சிரஞ்சீவி: ''இந்த முகவரி என்னுடையதுதான். அது பருத்தி அரவை செய்யும் இடம்.''

வழக்கறிஞர் நாராயணன்: ''ஆஜராகியுள்ள எதிரிகளும் நீங்களும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற வேண்டி பொய் சாட்சியம் அளித்துள்ளீர்கள்?''

சிரஞ்சீவி: ''இல்லை.''

சாட்சி எண்: 14

பெயர்: நவீன்ராஜ் (யுவராஜ் ஆட்கள் கோகுல்ராஜை ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாற்றும்போது நேரில் பார்த்தவர்)

வழக்கறிஞர் கருணாநிதி: ''நீங்க எங்க குடியிருக்கிறீங்க?''

நவீன்ராஜ்: ''சங்ககிரியில் குடியிருக்கிறேன்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''என்ன தொழில் செய்றீங்க?''

நவீன்ராஜ்: ''பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு விட்டு வருகிறேன்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''எத்தனை வாகனங்கள் வைத்திருக்கிறீர்கள்?''

நவீன்ராஜ்: ''ரெண்டு வாகனங்கள் வைத்திருக்கிறேன். என் சொந்தப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்திவருகிறேன்.''

வழக்கறிஞர் கருணாநிதி: (எதிரில் குற்றவாளிகள் கூண்டில் நின்றுகொண்டிருந்த யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்களைக் காட்டி...) ''இவர்களில் உங்களுக்கு யாரையாவது தெரியுமா?''

நவீன்ராஜ்: ''தங்கதுரை மற்றும் அவருடைய சகோதரர் யுவராஜை தெரியும்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''யுவராஜ் என்ன வாகனம் வைத்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?''

நவீன்ராஜ்: ''தெரியாது.''

வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் காட்டி...) ''நீங்கள் யுவராஜ் மீது செக் மோசடி வழக்கு போட்டிருக்கிறீர்கள்தானே?''

நவீன்ராஜ்: ''ஆமாம். செக் மோசடி வழக்கு போட்டுள்ளேன்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''யுவராஜ், தங்கதுரை மீது தற்போது என்ன வழக்கு இருக்கிறது என்று தெரியுமா?''

நவீன்ராஜ்: ''தெரியும். கொலைவழக்கு உள்ளது.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''இந்தக் கொலைவழக்கு சம்பந்தமாக காவல் துறையினர் உங்களை விசாரித்தார்களா?''

நவீன்ராஜ்: ''விசாரித்தார்கள்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''இந்தக் கொலைவழக்கு சம்பந்தமாக காவல் துறை விசாரணையின்போது என்ன கூறினீர்கள்?''

நவீன்ராஜ்: '' 'கொலை வழக்குகுறித்து எனக்கு எதுவும் தெரியாது'என்று காவல்துறையினரிடம் கூறினேன்.'

வழக்கறிஞர் கருணாநிதி: ''எத்தனை போலீஸார் உங்களை விசாரித்தார்கள்?''

நவீன்ராஜ்: ''இரண்டு பேர் விசாரித்தார்கள்.''

வழக்கறிஞர் நாராயணன்: ''கடந்த 23.6.2015-ம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு, சேலம் சங்ககிரி நெடுஞ்சாலையில் உள்ள டி.வி.எஸ் மேம்பாலம் அருகில் நீங்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, யுவராஜ் அவருடைய எம்.எம் 540 ஜீப்பை நிறுத்தினார் என்றும், அவரது டி.என் 41எஸ் 1564 என்ற டாடா சஃபாரி காரை ஐமாஸ் லைட் அருகில் நிறுத்தினார்கள் என்றும், அந்தக் காரில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்று எழுதப்பட்டிருந்தது என்றும், அந்தக் காரில் சிவப்பு பச்சை நிற கொடி கட்டப்பட்டிருந்தது என்றும், அதில் ஒல்லியாக நீல நிற சட்டை போட்டிருந்த ஒரு நபரைக் காரிலிருந்து ஜீப்பில் பின் பக்கத்தில் ஏற்றினார்கள் என்ற விவரத்தை காவல் துறையினர் உங்களை விசாரித்தபோது கூறியுள்ளீர்கள்?''

நவீன்ராஜ்: ''இல்லை.''

வழக்கறிஞர் நாராயணன்: ''நீங்களும் எதிரிகளும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிரிகளைக் காப்பாற்றவேண்டி பொய்யாக சாட்சியம் அளிக்கிறீர்கள்?''

நவீன்ராஜ்: ''இல்லை.''

வழக்கறிஞர் நாராயணன்: ''டி.என்.41 எஸ் 1564 டாடா சஃபாரி கார் யுவராஜுடையது தானே?''

நவீன்ராஜ்: ''எனக்குத் தெரியாது.''

வழக்கறிஞர் நாராயணன்: ''உங்க காடும், யுவராஜ் காடும் பக்கத்தில்தானே இருக்கிறது?''

நவீன்ராஜ்: ''ஆமாம். யுவராஜ் காடு பக்கத்தில்தான் என் காடு இருக்கு.''

வழக்கறிஞர் நாராயணன்: ''யுவராஜ் மீது எதற்காக வழக்கு போட்டீர்கள்?''

நவீன்ராஜ்: ''யுவராஜுக்கு நான் 10 லட்சம் கொடுத்தேன். அதை திருப்பித் தராமல் போலி செக் கொடுத்ததால் செக் மோசடி வழக்கு போட்டேன்.'' 

வழக்கறிஞர் நாராயணன்: ''அந்த வழக்கில் உங்களுக்குத்தானே சாதகமான தீர்ப்பு வந்தது.''

நவீன்ராஜ்: ''ஆமாம்.'' 

வழக்கறிஞர் நாராயணன்: ''இந்த வழக்கில் எதிரிகளுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தால்தான், காசோலை வழக்கில் உள்ள பணத்தை உங்களுக்குத் தருவார்கள் என்பதற்காக நீங்கள் இந்த வழக்கில் பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள்?''

நவீன்ராஜ்: ''இல்லை.''

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே: (குறுக்கீடு செய்து) ''அது அவர் போட்ட வழக்கல்ல. இவருடைய அண்ணன் போட்ட வழக்கு.''

நவீன்ராஜ்: ''ஆமாம். நான் போடவில்லை, என் அண்ணன் போட்ட வழக்கு.''

மதிய இடைவேளைக்குப் பிறகு...

சாட்சி எண்: 15

பெயர்: கார்த்திக்

(கோகுல்ராஜ் உடலை தண்டவாளத்தில் பார்த்த ரயில்வே கேட் கீப்பர்)

கார்த்திக் அளித்த வாக்குமூலம், ''நான் ஜுன் 2015ல் ஆலாம்பாளையம் ரயில்வே கேட் கீப்பராகப் பணியாற்றிவந்தேன். ஆலாம்பாளையம் ரயில்வே கேட்டின் என். எல்.சி. நெம்பர் 120ஏ. 24.6.2015ம் தேதியன்று ரயில்வே துறையினர் எனக்கு முள் வெட்டும் பணியைக் கொடுத்திருந்தார்கள். 382/11-13 என்ற அப்லைனில் நான் முள் வெட்டும் பணி செய்துகொண்டிருந்தேன். அப்போது, குப்பை பொறுக்கும் நபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் பிணம் கிடப்பதாக என்னிடம் கூறினார். அந்தச் சமயத்தில், கீமேன் ராஜன் என்பவர், நான் இருக்கும் இடத்துக்கு வந்தார். நானும் கீமேன் ராஜனும், ஆனங்கூரிலிருந்து காவேரி செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று பார்த்தபோது, அங்கு ஒரு பிணம் கிடந்தது. பிணம் கிடந்த இடம் 383/11-13 அப்லைன். பிணம் குப்புறப்படுத்த நிலையில் கிடந்தது. அருகில் ஒரு ஜோடி செருப்பு கிடந்தது. முகம் நசுங்கிய நிலையில் முகமூடிபோல் இருந்தது. மேற்படி சடலத்தில் நீல கலர் ஜீன்ஸ் பேண்டும், கத்திரி பூ கலர் சட்டையும் போடப்பட்டிருந்தது. பிரேதத்தின் சட்டைக்குள் கிரே கலர் பணியன் இருந்தது. பிறகு, நான் முள் வெட்டும் இடத்துக்கு வந்துவிட்டேன். ராஜன், ரயில்வே நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுவிட்டார்."

வழக்கறிஞர் கருணாநிதி: ''பிறகு காவல் துறையினர் எப்போது விசாரித்தார்கள்?'' 

கார்த்திக்: ''24-ம் தேதியன்றே ரயில்வே காவல் துறையினர் என்னை ரயில்வே காவல் நிலையத்தில் விசாரித்தார்கள். அதன்பிறகு சிபிசிஐடி காவல் துறையினர், நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரித்தார்கள்.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: ''அந்தப் பிரேதத்தின் வயது என்ன மதிப்பிருக்கும்?''

கார்த்திக்: ''சுமார் 25 வயது இருக்கும்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''மேற்படி இறந்த அந்த நபர் யார் என்று எப்படி தெரிந்துகொண்டீர்கள்?''

கார்த்திக்: ''செய்தித்தாளைப் பார்த்து, இறந்தவர் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பதைத் தெரிந்துகொண்டேன்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''டிரஸ்ஸைப் பார்த்தால் அடையாளம் காட்டுவீர்களா?''

கார்த்திக்: ''காட்டுவேன்.'' (அதையடுத்து கோகுல்ராஜ் இறுதியாக அணிந்திருந்த ஆடைகள் காட்டப்பட்டன. அதைப் பார்த்த கார்த்திக், இந்த ஆடைதான் அணிந்திருந்தார் என்றார்.)

(யுவராஜ் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை...)

வழக்கறிஞர் ஜி.கே: ''ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே பாதையை அப்லைன் என்பார்கள்?''

கார்த்திக்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''அந்த ரயில் பாதை ஒருவழிப் பாதைதானே?''

கார்த்திக்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''பிணம் கிடந்த இடம் கீ மேன் ராஜன் மேற்பார்வை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடம் தானே?''

கார்த்திக்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''தரையிலிருந்து தண்டவாளம் ஒன்றரை ஆள் உயரம் இருக்கும்தானே?''

கார்த்திக்: (சிந்தித்தவாறு...) ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''அந்தத் தண்டவாளத்தில் இரு பக்கமும் ஜல்லி கற்கள் போடப்பட்டிருக்கும்?''

கார்த்திக்: (சிரித்தவாறு... ) ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''ஜல்லி கற்கள் மேலிருந்து கீழ் வரை சரிவாகப் போடப்பட்டிருக்கும்?''

கார்த்திக்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''சரிவுகளில் செடிகள் வளர்ந்திருக்கும். சில இடங்களில் மரமும் இருக்கும்?''

கார்த்திக்: ''ஆமாம்.'' 

வழக்கறிஞர் ஜி.கே : ''பாலங்கள் உள்ள இடங்களில் அறிவிப்புப் பலகைகள் குறிக்கப்பட்டிருக்கும்?''

கார்த்திக்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''பாலங்கள் பல விதமான அளவுகளில் இருக்கும்?''

கார்த்திக்: ''ஆமாம்.'' 

வழக்கறிஞர் ஜி.கே : ''பிணத்தைப் பார்த்த இடத்துக்கு அருகில் ரயில்வே நிலையம் எங்குள்ளது?''

கார்த்திக்: ''ஆனங்கூர் ரயில் நிலையம் உள்ளது.'' 

வழக்கறிஞர் ஜி.கே : (ஐ.டி கார்ட், செல்போனைக் காட்டி) ''பிணம் கிடந்த இடத்தில் இந்தப் பொருள்கள் கிடந்ததா? ''

கார்த்திக்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''பிணம் கிடந்தபோது பார்த்த இந்தப் பொருள்களை மீண்டும் எப்போது பார்த்தீர்கள்?''

கார்த்திக்: ''இப்போதுதான் பார்க்கிறேன்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''காவல் துறையினர் உங்களை எப்போது விசாரித்தார்கள்?''

கார்த்திக்: ''24.6.2015-ம் தேதியன்று இரவு 9:00 மணிக்கு ரயில்வே காவல் துறையினர் என்னை விசாரித்தார்கள்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''ரயில்வே காவல் துறையினர் விசாரிக்கும் வரை வேறு யாரிடமாவது இந்த சம்பவத்தைச் சொன்னீர்களா?''

கார்த்திக்: ''இல்லை. யாரிடமும் கூறவில்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே : ''சம்பவம்குறித்து டிஎஸ்பி விஷ்ணுபிரியா உங்களை விசாரித்தார்களா?''

கார்த்திக்: ''இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே : ''பிறகு உங்களை யார் விசாரித்தார்கள்?''

கார்த்திக்: ''சுமார் 2 மாதம் கழித்து சிபிசிஐடி  காவல் துறையினர் விசாரித்தார்கள்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''மஸ்டர் ரோலில் உங்கள் வருகையும், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியும் குறிப்பிட்டிருக்குமா?''

கார்த்திக்: ''மஸ்டர் ரோலில் கையெழுத்து மட்டும்தான் இருக்கும். என்ன பணி என்பதெல்லாம் குறிப்பிட மாட்டார்கள்.'' 
வழக்கறிஞர் ஜி.கே : ''உங்களை காவல் துறையினர் விசாரித்தபோது ஜே.இ முருகன் இருந்தாரா?''

கார்த்திக்: ''இல்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே : ''உங்களுக்குப் பணி யார் ஒதுக்கித்தருவார்?''

கார்த்திக்: ''ஜே.இ முருகன்தான் ஒதுக்கித் தருவார்.'' 

வழக்கறிஞர் ஜி.கே : ''உங்களுக்குக் கொடுக்கும் பணி எங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்?''

கார்த்திக்: ''ஜே.இ முருகன் சாரின் டைரியில் எனக்கு ஒதுக்கப்பட்ட பணி குறிப்பிடப்பட்டிருக்கும்.''

வழக்கறிஞர் ஜி.கே : ''நீங்கள் எதையும் பார்க்கவில்லை. மேற்படி தேதியில் ரயில்வே தண்டவாளத்தில் நீங்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நிர்பந்தத்தின் பேரில் நீங்கள் சாட்சியம் அளித்திருக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன்.''

கார்த்திக்: ''இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே : ''சாட்சி வேண்டும் என்பதற்காக காவல் துறையினர் சொல்லிக் கொடுத்து நீங்கள் சாட்சியம் அளித்திருக்கிறீர்கள்?''
கார்த்திக்: ''இல்லை.''

சாட்சி எண்: 16

பெயர்: உஷாபிரியா

(ஐவேலி கிராம நிர்வாக அலுவலர்)

உஷாபிரியா அளித்த வாக்குமூலத்தில், "நான் சங்ககிரி மோரூர் பிட்-1 கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிகிறேன்.    9.10.2015-ம் தேதியன்று, சங்ககிரி தாலுக்கா, ஐவேலி கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் இருந்தபோது, சிபிசிஐடி ஆய்வாளர் என்னிடம் யுவராஜின் வீட்டுக்கு சோதனை செய்யவேண்டி செல்ல வேண்டும் என்று அழைத்தார்கள். அதன்பேரில் நானும் என் உதவியாளர் ஆண்டிமுத்து என்பவரும் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களும் ஐவேலி கிராமம், அக்கமாபேட்டையில் உள்ள ஜெய்ராஜ் நிவாஸ், கதவு எண் 1/221 என்ற வீட்டுக்கு காலை 8:00 மணிக்கு சென்றோம். வீட்டில் யுவராஜின் மனைவி கவிதா இருந்தார். காலை 8:00 மணியில் இருந்து காலை 8:45 மணி வரை வீட்டில் சோதனை நடத்தினோம். யுவராஜின் மனைவி கவிதா மற்றும் அவர்களின் உறவினர்களின் முன்னிலையில் வீட்டில் சோதனை நடத்தினோம். சோதனையின்போது வீட்டில் இருந்து ஐ போனும், அதன் சார்ஜரும் கைப்பற்றப்பட்டன. அதற்காக ஒரு சோதனை நமுனா தயார்செய்து, அதில் நானும், என் உதவியாளரும், யுவராஜின் மனைவி கவிதாவும், காவல் ஆய்வாளரும் கையெழுத்து போட்டோம்."

வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் காட்டி...) ''இது உங்கள் கையெழுத்தா?''

உஷாபிரியா: ''இது என்னுடைய கையெழுத்து. இதில் ஒரு நகல் யுவராஜின் மனைவி கவிதாவிடம் கொடுத்து கையெழுத்துப் பெற்றுள்ளோம்.'' 

(யுவராஜ் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை...)

வழக்கறிஞர் ஜி.கே: ''யாருடைய உத்தரவின் பேரில் வீட்டு சோதனைக்குச் சென்றீர்கள்?''

உஷாபிரியா: ''என்னுடைய துணை வட்டாட்சியர் தொலைபேசி மூலம் வீட்டு சோதனைக்குச் சென்று வரும்படி கூறியதை அடுத்து சென்றேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அவர் தொலைபேசியில் என்ன கூறினார்?''

உஷாபிரியா: ''சோதனைக்கு முந்தைய நாள் மாலை, சிபிசிஐடி காவல் துறையினர் சங்ககிரியில் உள்ள உங்க அலுவலகத்துக்கு வருவார்கள் என்றும், அவர்களுடன் ஒத்துழைக்கும்படி துணை வட்டாட்சியர் அளித்த வாய்மொழி உத்தரவின் பேரில் நான் மேற்படி சோதனைக்குச் சென்றேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் உங்க மேல்அதிகாரியின் உத்தரவை தட்டுவதில்லை?''

உஷாபிரியா: ''தட்டமாட்டேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''காவல் ஆய்வாளரை எப்போது பார்த்தீர்கள்?''

உஷாபிரியா: ''காலை 7:30 மணி இருக்கும்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் எங்கு இருக்கும்போது காவல் துறையினர் வந்தார்கள்?''

உஷாபிரியா: ''நான் சங்ககிரி அலுவலகத்தில் இருக்கும்போது வந்தார்கள்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''என்ன பணிக்காகச் செல்கிறோம் என்று உங்களிடம் சொன்னார்களா?''

உஷாபிரியா: ''சொன்னார்கள்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை செய்ய இருந்த வீட்டுக்கு எதில் சென்றீர்கள்?''

உஷாபிரியா: ''காவல் துறை ஜீப்பில் சென்றோம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை செய்த வீட்டுக்கு ஏற்கெனவே சென்றிருக்கிறீர்களா?''

உஷாபிரியா: ''இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''யுவராஜின் மனைவியை ஏற்கெனவே பார்த்திருக்கிறீர்களா?''

உஷாபிரியா: ''பார்த்ததில்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''எவ்வளவு நேரம் சோதனை நடந்த வீட்டில் இருந்தீர்கள்?''

உஷாபிரியா: ''காலை 7:45 முதல் காலை 8:45 வரை இருந்தோம்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: (ஆவணங்களைக் காட்டி...) ''இதில் படித்துப் பார்த்துதான் கையொப்பம் போட்டீர்களா?''

உஷாபிரியா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''வீட்டு சோதனையின்போது வீட்டு முகவரி முழுமையாக எழுதப்பட வேண்டும். இந்த ஆவணத்தில் ஐவேலி கிராமம் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது. வீட்டின் முழு விலாசம் எழுதப்படவில்லை.'' 

உஷாபிரியா: (ஆவணத்தை பார்த்துக்கொண்டிருந்தார்)

வழக்கறிஞர் ஜி.கே: ''ஐவேலி கிராமம் அக்கமாபேட்டையில்தான் உள்ளதா?'' 

உஷாபிரியா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''ஐவேலியில் எத்தனை குக்கிராமங்கள் இருக்கிறது?''

உஷாபிரியா: ''எட்டு குக்கிராமங்கள் இருக்கிறது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் சோதனை செய்த வீடு பெரிய சுற்றுச் சுவருக்குள் 3,4 வீடுகள் இருக்கிறது. அதில் முதல் தளத்தில் உள்ள வீட்டில் நீங்கள் ஆய்வு செய்தீர்கள்?''

உஷாபிரியா: ''முதல் தளத்தில் யுவராஜ் வீட்டில் ஆய்வு செய்தோம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அந்த பெரிய சுற்றுச் சுவர் கொண்ட 3,4 வீடுகள் யாருக்குச் சொந்தமானது?''

உஷாபிரியா: ''ஊர்க்கவுண்டருக்கு சொந்தமான வீடுகள்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் சோதனைக்குச் சென்றபோது ஊர்க்கவுண்டர் இருந்தாரா?''

உஷாபிரியா: ''எனக்கு ஞாபகம் இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: (ஆவணத்தைக் காட்டி...) ''இந்த ஆவணத்தில் ஊர்க்கவுண்டரிடம் காவல் துறையினர் கையெழுத்து போடச் சொல்லி கேட்டார்களா?''

உஷாபிரியா: ''ஞாபகம் இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: (ஆவணத்தைக் காட்டி...) இ''ந்த ஆவணத்தின் முதல் பக்கத்தில் 'இங்க்'கிலும், மறுபக்கத்தில் கார்பன் பேப்பரிலும் எழுதப்பட்டுள்ளது. கார்பன் பேப்பரில் எழுதப்பட்டுள்ள பல வாசகங்கள் மறைந்துள்ளன. முதல் பக்கத்தில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது. அதில், ஆப்பிள் ஐபோன் கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்தப் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக முதல் பக்கத்தில் குறிப்பிடப்படவில்லை. இதன், முதல் பக்கத்தில் யாருடைய கையெழுத்து உள்ளது?''

உஷாபிரியா: ''ஆய்வாளர் அம்மாவின் கையெழுத்து.''

வழக்கறிஞர் ஜி.கே: ''இரண்டாம் பக்கத்தில் உள்ளது உங்கள் கையெழுத்துதானா?''

உஷாபிரியா: ''என்னுடைய கையெழுத்துதான்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கையெழுத்து தெளிவாக பார்க்கும்படி இருக்கிறதா?''

உஷாபிரியா: (தயக்கத்தோடு) ''இருக்கு.''

வழக்கறிஞர் ஜி.கே: (அதட்டலாக... உஷா பிரியாவின் முகத்துக்கு அருகே கையை நீட்டி...) ''பிறர் பார்க்கும்போது தெளிவாகத் தெரிந்து கொள்வது போல இருக்கிறதா?''

உஷாபிரியா: ''தெளிவாக இருக்கிறது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''உங்கள் கையெழுத்துக்கு அருகில் உள்ள கையெழுத்துகள் தெளிவாக இருக்கிறதா?''

உஷாபிரியா: ''தெளிவாக இருக்கிறது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் வேண்டும் என்றே பொய் சொல்கிறீர்கள்?''

உஷாபிரியா: ''இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை நடந்த வீட்டுக்குள் யார் யார் சென்றீர்கள்?''

உஷாபிரியா: ''நானும், ஆய்வாளர் அம்மாவும் சென்றோம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அப்போது காவல் ஆய்வாளர் என்ன செய்தார்?''

உஷாபிரியா: ''ஒவ்வொரு அறையிலும் தேடிப்பார்த்தார்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''தேடிப்பார்த்துதான் ஐபோன், சார்ஜர் எடுக்கப்பட்டதா?''

உஷாபிரியா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''எந்த அறையில் இருந்து ஐபோனும், சார்ஜரும் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களா?''

உஷாபிரியா: ''குறிப்பிடப்படவில்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை நடத்திய பிறகு எங்கு சென்றீர்கள்?''

உஷாபிரியா: ''தாலுக்கா அலுவலகத்துக்குச் சென்றோம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அப்போது காவல் துறை ஆய்வாளரும் உங்ககூட வந்தாரா?''

உஷாபிரியா: ''எங்களோடு வந்தார்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''தாலுக்கா அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் உங்களையும், உங்க உதவியாளரையும் விசாரித்து கையெழுத்து வாங்கினாரா?''

உஷாபிரியா: ''இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் குறிப்பிடுவது போல எந்த வீட்டுக்கும் செல்லவில்லை. உங்கள் முன்னிலையில் காவல் துறையினர் எந்த பொருள்களையும் கைப்பற்றவும் இல்லை. காவல் நிலையத்தில் வைத்து தயார் செய்யப்பட்ட ஆவணத்தில் நீங்களும் உங்கள் உதவியாளரும் கையொப்பம் செய்துள்ளீர்கள்?''

உஷாபிரியா: ''இல்லை.''

சாட்சி எண்: 17

பெயர்: ரவீந்திரன்

(கோரணம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கூண்டில் ஏறினார்...)

ரவீந்திரன் அளித்த வாக்குமூலத்தில், ''நான் தற்போது ஆவணிபேரூர் கிழக்கு கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிகிறேன். நான் கோரணம்பட்டி கிராமத்தில் பணிபுரிந்தபோது, 8.10.2015 தேதியன்று தலைமையிடத்து துணை வட்டாட்சியர். 9.10.2015-ம் தேதியன்று காலை 6:30 மணிக்கு தாலுக்கா அலுவலகத்துக்கு வரச்சொன்னார். அதன் பேரில் நானும், கொங்கணாபுரம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கோபாலும் தாலுக்கா அலுவலகத்துக்குச் சென்றோம். கோகுல்ராஜ் கொலை சம்பந்தமாக சேலம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பால்ராஜ் அவர்களோடு நானும், கிராம உதவியாளரும் மற்றும் காவலர்கள் அனைவரும் காவல் துறையின் ஜீப்பில் சங்கரின் வீடான மோரிவளவு, ரெட்டிபட்டி அஞ்சல், குரும்பப்பட்டி கிராமம் என்ற இடத்துக்குச் சென்றோம். அங்கு, சங்கரின் தந்தை வேலு இருந்தார். சங்கரின் தந்தை வேலுவிடம் வீட்டை சோதனைசெய்ய அனுமதிபெற்று சோதனைசெய்தோம்."

வழக்கறிஞர் கருணாநிதி: ''எத்தனை மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்றீர்கள்?''

ரவீந்திரன்: ''காலை 7:15 மணிக்கு சென்றோம்.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: ''வீட்டில் எத்தனை பொருள்களைக் கைப்பற்றினீர்கள்?''

ரவீந்திரன்: ''21 பொருள்களைக் கைப்பற்றினோம்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''என்னென்ன பொருள்களைக் கைப்பற்றினீர்கள்?

ரவீந்திரன்: ''சங்கரின் ஓட்டுநர் உரிமம், சங்கரின் பாஸ்போர்ட் நகல், கே.எஸ்.ஆர் கல்லூரியின் நாட்குறிப்பு, டைரி, எஸ்.பி.ஐ ஏடிஎம் கார்டு, எஸ்.பி.ஐ பாஸ் புக், ஏர்செல் சிம் கார்டு ஒன்று, பி.எஸ்.என்.எல் ஈஸி செய்யும் சிம் கார்டு ஒன்று, சங்கர் எழுதிய கடிதம் ஒன்று, 5 சிறிய நாட்குறிப்பு டைரிகள், 2 நாட்குறிப்பு டைரிகள், தீரன்சின்னமலை அறக்கட்டளை உறுப்பினர் புக் ஒன்று, தீரன் சின்னமலை புக் ஒன்று, சங்கரின் புகைப்படம் ஒன்று, சங்கரின் பர்ஸ் ஒன்று, யுவராஜ் எழுதிய கடிதம் ஒன்று, மைக்ரோமேக்ஸ் போன் வாங்கியதற்கான ரசீது ஒன்று, கார்த்திக் என்ற நபர் செல்போன் கம்பெனிக்கு எழுதிய கடிதம் ஒன்று ஆகியவற்றைக் கைப்பற்றினோம்.''

வழக்கறிஞர் கருணாநிதி: ''அந்தப் பொருள்களைக் காட்டினால் அடையாளம் காட்ட முடியுமா?''

ரவீந்திரன்: ''காட்டுவேன்.''

(அதையடுத்து, அனைத்துப் பொருள்களும் ரவீந்திரனிடம் காட்டி அடையாளம் குறித்துக்கொள்ளப்பட்டது. யுவராஜ் எழுதியதாகக் கடிதம் காட்டப்பட்டபோது, யுவராஜ் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கீடுசெய்தார்.)

வழக்கறிஞர் ஜி.கே: ''யுவராஜ் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம், யுவராஜ்தான் எழுதினாரா என்பதை உறுதிசெய்யாமல் குறியீடு செய்யக் கூடாது.''

நீதிபதி: ''ஓ.கே.'' 

(அதைத் தொடந்து கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரனிடம் யுவராஜ் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கீடு)

வழக்கறிஞர் ஜி.கே: ''சம்பவத்தன்று நீங்கள் எங்கே பணிபுரிந்தீர்கள்?''

ரவீந்திரன்: ''கோரணம்பட்டியில் பணி புரிந்தேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''குரும்பப்பட்டி கிராமத்துக்கு வேறு ஒரு வி.ஏ.ஓ இருந்தார்?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் குரும்பப்பட்டி வி.ஏ.ஓ.,வாக இல்லாதபோது, அந்த கிராமத்துக்கு எதற்காக சோதனைக்குச் சென்றீர்கள்?''

ரவீந்திரன்: ''வட்டாட்சியர் உத்தரவின்படி சென்றேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனைக்கு முன்பு அந்த வீட்டுக்கு போயிருக்கிறீர்களா?''

ரவீந்திரன்: ''சென்றதில்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''பேருந்து நிறுத்தத்துக்கு அருகில்தான் அந்த வீடு இருந்ததா?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அந்த வீட்டுக்கு முன்புறம் ஒரு கடையும், கடைக்குப் பின்புறம் வீடும் உள்ளது?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அந்த வீட்டுக்கு நுழைவு வாயில், கடை வழியாகவும் மற்றொரு நுழைவு வாயில் வீட்டுக்குப் பின்புறமும் உள்ளது?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் சென்றபோது கடையில் வியாபாரம் நடந்துகொண்டிருந்ததா?'' 

ரவீந்திரன்: ''வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அங்கு ஆட்கள் இருந்தார்கள்?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை நடந்த வீட்டுக்கு அருகில் ஒரு கடையும், ஒரு வீடும் உள்ளது?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை செய்த வீடும், அதன் முன்புறத்தில் இருந்த கடைக்கும் வேலுதான் உரிமையாளர்?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சிபிசிஐடி போலீஸாரோடு நீங்களும் சென்றீர்கள்?''

ரவீந்திரன்: ''நானும்தான்  சென்றேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை நடந்த வீட்டில் சமையலறை, படுக்கையறை, ஹால் ஆகியவை இருந்தனவா?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கடை பெரியதாகவும், கடையை ஒட்டி ஒரு சிறிய அறையும் உள்ளது?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அந்த அறையின் வழியாகத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்?''

ரவீந்திரன்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''மேலே நீங்கள் காட்டிய பொருள்கள் அனைத்தும் ஒரே அறையில் இருந்து எடுக்கப்பட்டதா?''

ரவீந்திரன்: ''ஒரே அறையில் இருந்துதான் எடுக்கப்பட்டது.''

வழக்கறிஞர் ஜி.கே: (ஆவணத்தைக் காட்டி) ''எந்த அறையில் எந்தப் பகுதியில் இருந்து பொருள்கள் எடுக்கப்பட்டது என்ற குறிப்பு எழுதப்படவில்லை. மேலும், அனைத்துப் பொருள்களும் பெட்டிக்குள் இருந்து எடுக்கப்பட்டதா? வேறு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்புகள் இல்லை. வீட்டில் எவ்வளவு நேரம் சோதனை செய்தீர்கள்?''

ரவீந்திரன்: ''காலை 7:15 மணியில் இருந்து மதியம் 12:45 மணி வரை சோதனை செய்தோம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை நடந்தபோது வேலு மற்றும் அவரின் உறவினர்கள் இருந்தார்களா?''

ரவீந்திரன்: ''இருந்தார்கள்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களைத் தெரியுமா?''

ரவீந்திரன்: ''தெரியாது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனையின்போதுதான் முதன் முதலில் பார்க்கிறீர்களா?''

ரவீந்திரன்: ''ஆமாம். சோதனையின்போதுதான் பார்த்தேன்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''அதன் பிறகு இப்ப நீதிமன்றத்தில்தான் பார்க்கிறீர்களா?''

ரவீந்திரன்: ''ஆமாம். தற்போது நீதிமன்றத்தில்தான் பார்க்கிறேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''உங்களுக்கு எப்போது யார் இந்தப் பணிகளைச் செய்யச்சொன்னது?''

ரவீந்திரன்: ''8.10.2015-ம் தேதியன்று மாலை 6 மணிக்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எனக்கு போன்செய்து மறுநாள் காலை எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துஜ்க்குச் செல்லும்படிக் கூறி, காவல் துறையினருக்கு உடன் இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கூறினார்.

வழக்கறிஞர் ஜி.கே: ''உங்கள் உயர் அதிகாரிகள் சொல்லும் வேலைகளைத் தட்டாமல் கேட்பீர்களா?''

ரவீந்திரன்: ''கேட்பேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சோதனை நடந்த பிறகு உங்களிடம் சிபிசிஐடி போலீஸார் எங்கு வைத்து விசாரித்து வாக்குமூலம் பெற்றார்கள்?''
ரவீந்திரன்: ''நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரித்து வாக்குமூலம் பெற்றார்கள்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அப்போது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் இருந்தனவா?''

ரவீந்திரன்: ''இருந்தன.''  

வழக்கறிஞர் ஜி.கே: ''உங்கள் விசாரணையை காவல் துறையினர் எழுதிக்கொண்டார்களா?''

ரவீந்திரன்: ''எழுதிக்கொண்டார்கள்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அப்போது உங்களிடம் கையொப்பம் வாங்கினார்களா?''

ரவீந்திரன்: ''இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கைப்பற்றப்பட்ட கடிதத்தை நீங்கள் படித்தீர்களா? படித்துக் காண்பித்தார்களா?''

ரவீந்திரன்: ''நான் படிக்கவும் இல்லை, யாரும் படித்துக்காட்டவும் இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் எந்த வீட்டுக்கும் சோதனைக்கும் செல்லவில்லை. உங்கள் முன்னிலையில் காவல் துறையினர் எந்தப் பொருளையும் கைப்பற்றவுமில்லை. காவல் நிலையத்தில் வைத்து தயார்செய்யப்பட்ட ஆவணத்தில் நீங்கள் கையொப்பம் செய்துள்ளீர்கள்?''

ரவீந்திரன்: ''இல்லை.''

சாட்சி எண்: 18

பெயர்: பூபதிராஜன்

(பள்ளிப்பாளையம் அமானி கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளர்)

பூபதிராஜா வாக்குமூலம், ''நான் தற்போது புதுப்பாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராகப் பணிபுரிகிறேன். கடந்த 7.3.2015 தேதியிலிருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அமானி கிராமத்தில் கிராம உதவியாளராகப் பணிபுரிந்தேன். அந்தச் சமயத்தில் 24.6.2015-ம் தேதியன்று, நானும் வீ.ஏ.ஓ குருதேவனும் அலுவலகப் பணிக்காக கிழக்கு தொட்டிபாளையம் சென்றபோது, ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பிரேதம் கிடப்பதாக ஒரு பெரியவர் எங்களிடம் கூறினார். நானும் கிராம நிர்வாக அலுவலரும் அங்கு சென்று பார்த்தோம். கிழக்கு தொட்டிபாளையத்தில் இருந்து 383/300 என்ற மைல் கல் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பிரேதம் கிடந்தது. பிரேதம் வடகிழக்குத் திசையில் இருந்தது. பிரேதமானது குப்புறப்படுத்த நிலையில், உடலின் முண்டம் மட்டும் தனியாக இருந்தது. இரண்டு அடிக்கு அருகில் பிரேதத்தின் முகம் முகமூடி போல் கிடந்தது. அருகில் செருப்பு கிடந்தது. ரயில்வே காவல் துறையினர் பிரேதம் கிடந்த இடத்தை பார்வையிட்டு பார்வை மகஜரும், மாதிரி வரைபடமும் தயார்செய்தார்கள்.

பிரேதத்தைப் புரட்டிப் பார்த்ததில், கே.எஸ்.ஆர் கல்லூரியின் அடையாள அட்டை, டேக்குடன் இருந்தது. தற்கொலைக் கடிதம் இருந்தது. அர்த்தனாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவரும் பேருந்துப் பயணச்சீட்டு, கறுப்பு நிற மைக்ரோமேக்ஸ் போன் இருந்தது. அரைஞாண் கயிறு சிவப்புக் கயிறு போட்டு அறுந்த நிலையில் இருந்தது. அடையாள அட்டையில் இருந்த போன் நம்பருக்கு ரயில்வே போலீஸார் போன் செய்தார்கள். 

அதில், சித்ரா என்பவரின் போன் நம்பர் இருந்தது. சித்ரா என்ற நபரை காவல் துறையினர் சுமார் 4 மணிக்கு தொடர்புகொண்டார்கள். ரயில்வே தண்டவாளத்தில் பிணம் கிடப்பதாக போனை எடுத்த நபரிடம் காவல் துறையினர் கூறினார்கள். சித்ரா, தன் மகன் காணமல்போனதால் புகார் கொடுக்க காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளதாகக் கூறினார். இறந்த நபரின் மூத்த சகோதரர் பிணம் கிடந்த இடத்துக்கு மாலை 4:30 மணிக்கு வந்தார். அங்கு வந்த இறந்த நபரின் மூத்த சகோதரர், இறந்து கிடப்பது தன்னுடைய இளைய சகோதரர் என்று அடையாளம் கூறினார். 

பிரேதத்திலிருந்து எடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தை உதவி ஆய்வாளர் அப்புசாமி இறந்த நபரின் மூத்த சகோதரரிடம் காண்பித்தார். அவர் அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு, தன் தம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். மேற்சொன்ன அனைத்துப் பொருள்களையும் ரயில்வே காவல் துறையினர் கைப்பற்றி மகஜர் தயார்செய்து அதில் சாட்சியாக நானும், கிராம நிர்வாக அலுவலரும் கையொப்பமிட்டோம்'' என்றார்.

வழக்கறிஞர் கருணாநிதி: ''ஆவணங்களைக் காட்டினால் உங்கள் கையெழுத்தையும், உங்கள் கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்தையும் அடையாளம் காட்டுவீர்களா?''

பூபதிராஜா: ''காட்டுவேன்.'' 

(அவரிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி ஆவணங்களைக் காட்டினார். அனைத்து ஆவணங்களிலும் தன்னுடைய கையெழுத்தையும், கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்தையும் காட்டி குறீயீடு செய்யப்பட்டது.)

வழக்கறிஞர் கருணாநிதி: ''அந்த பிரேதத்தின்மீது என்னென்ன ஆடைகள் இருந்தன?''

பூபதிராஜா: புளூ கலர் ஜீன்ஸ் பேன்ட்டும், கத்திரி பூ கலர் சட்டையும், பூமர் ஜட்டியும் கிரே கலர் பனியனும் பிரேதத்தின்மீதி இருந்தது.'' 
வழக்கறிஞர் கருணாநிதி: அதைக் காட்டினால் அடையாளம் காட்டுவீர்களா?

பூபதிராஜா: ''காட்டுவேன்.''

(அதையடுத்து கோகுல்ராஜ் இறுதியாக அணிந்திருந்த ஆடைகள் காட்டப்பட்டு குறியீடு செய்யப்பட்டது.)

வழக்கறிஞர் கருணாநிதி: ''பிறகு என்ன நடந்தது?''

பூபதிராஜா: ''இரவு 7.15 மணி வரை பிரேதம் கிடந்த இடத்தில் இருந்தேன். ரயில்வே காவல் துறையினர் என்னை விசாரித்தார்கள். ஆனால், வாக்குமூலம் பதிவுசெய்யவில்லை. அதன்பிறகு, 26.6.2015 தேதியன்று காவல் துணை கண்காணிப்பாளர், பிணம் கிடந்த இடத்துக்கு வந்து இடத்தைப் பார்வையிட்டு, மாதிரி வரைபடமும், பார்வை மகஜரும் தயார்செய்தார். அந்தப் பார்வை மகஜரில் நானும், என் கிராம நிர்வாக அலுவலரும் கையொப்பம் இட்டோம்.'' 

வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் கொடுத்து அடையாளம் காட்டி குறியீடு செய்யப்பட்டது.)

பூபதிராஜா: ''அதன் பிறகு, ரத்தம் படித்த ஜல்லி கற்களையும், ரத்தம் படியாத ஜல்லி கற்களையும் கைப்பற்றி மகஜர் தயார்செய்தார். அதிலும் நகலிலும் நானும், கிராம நிர்வாக அலுவலரும் கையெழுத்துப் போட்டோம்.''

வழக்கறிஞர் கருணாநிதி: (அந்த ஆவணத்தையும் கொடுத்து அடையாளம் காட்டி குறியீடு செய்யப்பட்டது.)

(பூபதிராஜாவிடம் யுவராஜ் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை...)

வழக்கறிஞர் ஜி.கே: ''கிராம நிர்வாக அலுவலர்தான் உங்க உயர் அதிகாரியா?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''பணி நிமித்தமாக அவருடன்தான் செல்வீர்களா?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கிராம நிர்வாக அலுவலர் விசாரணையின்போது முழுமையாக உடன் இருந்தாரா?''

பூபதிராஜா: ''இருந்தார்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''ஆவணங்களில் முதலில் கிராம நிர்வாக அலுவலரும், அதன் பிறகு நீங்களும் கையொப்பம் போட்டீர்கள்?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''ஏன் அவர் இன்று நீதிமன்றத்துக்கு வரவில்லை?''

பூபதிராஜா: ''உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அதைத் தவிர வேறு காரணங்கள் இருக்கிறதா?''

பூபதிராஜா: ''இல்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''இன்று நீங்கள் யாரிடம் பெர்மிஷன் வாங்கி நீதிமன்றம் வந்தீர்கள்?''

பூபதிராஜா: ''வருவாய் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு வந்தேன்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சம்பவ சமயத்தில் இருந்த வீ.ஏ.ஓ- வும், தற்போது உள்ள வீ.ஏ.ஓ- வும் ஒருவரா?''

பூபதிராஜா: ''இல்லை. சம்பவ சமயத்தில் இருந்த வீ.ஏ.ஓ வேறு, தற்போது இருக்கும் வீ.ஏ.ஓ வேறு.''

வழக்கறிஞர் ஜி.கே: ''சம்பவ சமயத்தில் இருந்த வீ.ஏ.ஓ., எங்கிருக்கிறார்?''

பூபதிராஜா: ''எலந்தகுட்டை கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிகிறார்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''புலன் விசாரணை சமயத்தில் இருந்த வீ.ஏ.ஓ-வுக்குதான் உடல்நிலை சரியில்லையா?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''புலன்விசாரணையின்போது நீங்கள் எங்கு பணிபுரிந்தீர்கள்?''

பூபதிராஜா: ''பள்ளிப்பாளையம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''தொட்டிபாளையத்திற்கென்று தனியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறாரா?''

பூபதிராஜா: ''இல்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''தொட்டிபாளையத்தில் எத்தனை பகுதிகள் இருக்கிறது.'' 

பூபதிராஜா: ''கிழக்குத் தொட்டிபாளையம், வெங்கடேசபுரம் என்ற இருபகுதிகள் இருக்கிறது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் கிழக்குத் தொட்டிபாளையத்துக்கு எத்தனை மணிக்கு சென்றீர்கள்?''

பூபதிராஜா: ''மதியம் 1 மணி இருக்கும்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் கிழக்குத் தொட்டிபாளையத்தில் இருந்த போது ரயில்வே தண்டவாளத்தில் பிணம் கிடப்பதாக ஒருவர் தகவல் சொன்னாரல்லவா, அவ்வாறு தகவல் கிடைத்தபோது அதைக் கிராம நிர்வாக அலுவலர் எழுதிக்கொள்ளவில்லையா?''

பூபதிராஜா: ''இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''உங்களிடம் செல்போன் இருக்கா?''

பூபதிராஜா: ''இருக்கிறது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்களும், கிராம நிர்வாக அலுவலரும் உடனே பிணம் கிடக்கும் தகவலை காவல் துறையினரிடம் சொன்னீர்களா?''

பூபதிராஜா: ''சொல்லவில்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்களும், கிராம நிர்வாக அலுவலரும்  பிணம் கிடந்த இடத்துக்குச் சென்றீர்களா?''

பூபதிராஜா: ''சென்றோம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் எதற்காக பிணம் கிடந்த இடத்துக்குச் சென்றீர்கள். அங்கு என்ன செய்தீர்கள்?''

பூபதிராஜா: ''பிணத்தைப் பார்வையிட்டு, குற்ற நமுனாவுடன் வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவித்தோம். ''

வழக்கறிஞர் ஜி.கே: ''வட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வந்தாரா? ''

பூபதிராஜா: ''இல்லை.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அப்படி வந்தால் உங்களையும், கிராம அலுவலரையும் அழைத்துதானே செல்வார்?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''பிணம் கிடந்த இடத்துக்கு வட்டாட்சியர் அவராகவும் வரவில்லை?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''பிணம் கிடந்த இடத்துக்கு நீங்கள் சென்றபோது கலைச்செல்வன் என்பவர் அங்கு இருந்தாரா?''

பூபதிராஜா: ''இல்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் அங்கு இருக்கும்போது தான் கலைச்செல்வன் என்பவர் வந்தாரா? எத்தனை மணிக்கு வந்தார்?''

பூபதிராஜா: ''நாங்க அங்கு இருக்கும்போது கலைச்செல்வன் வந்தார். மாலை சுமார் 4:30 மணிக்கு வந்தார்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கலைச்செல்வனிடம் தற்கொலைக் கடிதம் காட்டப்பட்டதா? அதற்கு அவர் என்ன சொன்னார்.''

பூபதிராஜா: ''தற்கொலைக் கடிதத்தைக் கொடுத்தார்கள். அதைப் படித்துவிட்டு சந்தேகம் இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கலைச்செல்வன் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே மேற்சொன்ன அனைத்து பொருள்களும் கைப்பற்றப்பட்டதா?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''தற்கொலைக் கடிதத்தைத் தவிர வேறு பொருள்கள் காட்டப்பட்டதா?''

பூபதிராஜா: ''கல்லூரி அடையாள அட்டை காட்டப்பட்டது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அடையாள அட்டையோடு கழுத்தில் மாட்டும் கயிறு இருந்ததா?''

பூபதிராஜா: ''இருந்தது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கலைச்செல்வனை ரயில்வே காவல் துறையினர் விசாரித்தார்களா?''

பூபதிராஜா: ''விசாரித்தார்கள்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கலைச்செல்வனை ரயில்வே காவல் துறையினர் விசாரித்தபோது, அவர் ஒத்துழைப்பு தராமல் அங்கிருந்து சென்று விட்டார்?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''பிணம் கிடந்த இடத்துக்கு காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா வந்தாரா?''

பூபதிராஜா: ''வந்தார்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''அவர் வந்து பார்த்தபோது பிணம் எங்கிருந்தது?''

பூபதிராஜா: ''பிணம் தண்டவாளத்தின்மீது இருந்தது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''டிஎஸ்.பி., விஷ்ணுபிரியா பிணத்தைப் பார்வையிட்டபோது ஒரு ரயில் கடந்துசென்றதா?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''டிஎஸ்பி., விஷ்ணுபிரியா சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே சான்று பொருள்கள் கைப்பற்றப்பட்டதா?''

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''பிணம் கிடந்த இடத்தில் இருந்த செருப்பை யார் கைப்பற்றியது?''

பூபதிராஜா: ''ரயில்வே காவல் துறையினர் கைப்பற்றினார்கள்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''ரயில்வே காவல் துறையினர் பார்வையிட்டபோது ரயில்வே தண்டவாளத்திலும், ரயில்வே தண்டவாளத்தின் இடையில் இருந்த கட்டையிலும் ரத்தம் இருந்தது. அந்த ரத்த மாதிரிகளை ரயில்வே காவல் துறையினர் கைப்பற்றினார்களா?''
பூபதிராஜா: ''கைப்பற்றினார்கள்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''அந்த மகஜரில் உங்களிடம் கையெழுத்து வாங்கினார்களா?''

பூபதிராஜா: ''இல்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''மீண்டும் பிணம்  கிடந்த இடத்துக்கு எப்போது சென்றீர்கள்?'' 

பூபதிராஜா: ''26-ம் தேதி காவல் துறையினர் வரச்சொன்னதால் சென்றோம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''நீங்கள் செல்லும்போது பிணம் அங்கேயே இருந்ததா?''

பூபதிராஜா: ''பிணத்தை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.'' 

வழக்கறிஞர் ஜி.கே:'' ஜல்லிக் கற்களை எடுப்பதற்காகத்தான் உங்களை வரச் சொன்னார்களா?''

பூபதிராஜா: ''இல்லை. ''

வழக்கறிஞர் ஜி.கே: ''பிணம் கிடந்த இடத்துக்கும், உங்கள் அலுவலகத்துக்கும் எவ்வளவு தூரம்?''

பூபதிராஜா: ''ஆறு கிலோமீட்டர்.''

வழக்கறிஞர் ஜி.கே:'' நீங்கள் காவல் துறை வருவதற்கு முன்பே சென்றுவிட்டீர்களா?''

பூபதிராஜா: ''நாங்கள் போவதற்கும், அவர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது.''

வழக்கறிஞர் ஜி.கே: ''டிஎஸ்பி., விஷ்ணுபிரியா ரத்தம் படிந்த கல், ரத்தம் படியாத கல் ஆகியவற்றைக் கைப்பற்றியபோது மகஜரில் கையெழுத்து வாங்கினாரா?''

பூபதிராஜா: ''என்னிடமும், வீ.ஏ.ஓ- விடமும் வாங்கினார்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''ரயில்வே காவல் துறையினரும் உங்களிடம் மகஜரில் கையெழுத்து வாங்கினார்களா?''

பூபதிராஜா: ''வாங்கினார்கள்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''பிணம் கிடந்த இடத்தை யார் புகைப்படம் எடுத்தது?''

பூபதிராஜா: ''ரயில்வே போலீஸார் புகைப்படம் எடுத்தார்கள்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''சிபி.சிஐடி போலீஸார் விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட பொருள்களைக் காட்டி விசாரித்தார்களா?''

பூபதிராஜா: ''விசாரித்தார்கள்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''விஷ்ணுபிரியா கைப்பற்றப்பட்ட பொருள்களைக் காட்டி உங்களிடம் விசாரித்தாரா?''

பூபதிராஜா: ''இல்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''ஜல்லிக் கற்கள் கட்டடம் அஸ்திவாரம் போடுவதற்குப் பயன்படுத்துவார்கள்.'' 

பூபதிராஜா: ''ஆமாம்.''

வழக்கறிஞர் ஜி.கே: ''கட்டடத்துக்குப் பயன்படுத்தப்படும் ஜல்லிக் கற்களுக்கும், ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக் கற்களுக்கும் வித்தியாசம் தெரியுமா?''

பூபதிராஜா: ''தெரியும். தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக் கற்களில் ஆயில் படிந்திருக்கும்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''வீட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஜல்லிக் கற்களின் அளவும், தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக் கற்களின் அளவும் தெரியுமா?''

பூபதிராஜா: ''தெரியாது.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''தண்டவாளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் இல்லை. நீங்கள் சொன்னவாறு இரண்டு மூன்று முறை நீங்கள் பிணம் கிடந்த இடத்துக்குச் செல்லவில்லை. உங்கள் முன்னிலையில் எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை. பிணம் கிடந்த இடத்தில் உங்கள் முன்னிலையில் எந்த ஒரு ஆவணமும் தயார் செய்யப்படவில்லை. காவல் நிலையத்தில் வைத்து ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.'' 

பூபதிராஜா: ''இல்லை.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''சட்டை, ஜீன்ஸ் பேன்ட்டை பிணம் கிடந்த இடத்தில் பார்த்த பிறகு, தற்போதுதான் பார்க்கிறீர்களா?''

பூபதிராஜா: ''ஆமாம்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ''சட்டை, ஜீன்ஸ் பேன்ட் என்ன நிறத்தில் இருக்கும்?''

பூபதிராஜா: ''காவல் துறை விசாரணையின்போதே சட்டை, ஜீன்ஸ் பேன்ட் என்ன நிறத்தில் இருந்தது என்று சொல்லியிருக்கிறேன். ''

வழக்கறிஞர் ஜி.கே: ''காவல் துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் நீங்கள் சாட்சியம் அளித்திருக்கிறீர்கள்?''

பூபதிராஜா: ''இல்லை.'' 

சாட்சி எண்:12

பெயர்: வடிவேல் 

தீரன் சின்னமலைக்கவுண்டர் கட்சிக்கு நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்த அச்சக உரிமையாளர் மனுவின் பேரில் மீண்டும் வரவழைக்கப்பட்டு கூண்டில் ஏறினார். அவரிடம் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்...)

வழக்கறிஞர் நாராயணன்: ''உங்க செல்போன் நம்பர் என்ன?''

வடிவேல்: (தன் செல்போன் எண்ணைக் கூறினார்) 

வழக்கறிஞர் நாராயணன்: ''எத்தனை ஆண்டுகளாக இந்த எண்ணைப் பயன்படுத்திவருகிறீர்கள்?''

வடிவேல்: ''15 ஆண்டுகளாகப் பயன்படுத்திவருகிறேன்.'' 

வழக்கறிஞர் ஜி.கே: ( கோபமாக...) ''அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் இருக்கும்போது இவர் எப்படி குறுக்கீடுசெய்ய முடியும்?'' 

நீதிபதி: ''அவருடைய அனுமதியோடுதான் அவர் குறுக்கீடு செய்கிறார்.'' 

வழக்கறிஞர் நாராயணன்: ''உங்க பிரஸ் பெயர் என்ன?''

வடிவேல்: ''ஶ்ரீ பச்சியம்மன் கம்ப்யூட்டர் பிரஸ்.''

வழக்கறிஞர் நாராயணன்: ''பிரின்ட் அச்சடிக்கும்போது, உங்க நிறுவனத்தின் பெயரும், செல்போன் எண்ணையும் போட்டிருப்பீங்களா?''

வடிவேல்: ''ஆமாம்.''

வழக்கறிஞர் நாராயணன்: (நோட்டீஸைக் காட்டி...) ''நன்றாகப் பாருங்கள் இந்த நோட்டிஸில் உங்க நிறுவனத்தின் பெயரும், செல்போன் எண்ணும் இருக்கிறது. அதனால், நீங்கள்தான் இந்த நோட்டீஸை அச்சடித்திருக்கிறீர்கள்?''

வடிவேல்: (இறுக்கமான முகத்தோடு கீழே இறங்கி வெளியே வந்தார்)

அதையடுத்து நீதிபதி: இந்த வழக்கு விசாரணை மீண்டும் 22-ம் தேதி நடைபெறும். அதுவரை, 'யுவராஜ் உட்பட 15 பேரை காவல் துறையினர் கஸ்டடி எடுத்துக்கொள்ளலாம்' என்று வாய்தா போட்டார். 


டிரெண்டிங் @ விகடன்