வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:22:32 (06/10/2018)

`மரக்கன்றுகள்; நவீன இருக்கைகளுடன்கூடிய பார்வையாளர் அறை! - ஹைடெக்கான சிதம்பரம் காவல் நிலையம்

போலீஸ் ஸ்டேஷன் என்றாலே பொதுமக்கள் அங்கு செல்லவே அச்சப்படும் நிலைதான் பெரும்பாலான இடங்களில் இன்று வரை உள்ளது. ஆனால், `சிதம்பரம் தாலுகா காவல்நிலையம் அப்படி இல்லை, மக்கள் தங்களின் அச்சத்தைப் போக்கித் தயக்கம் இல்லாமல், போலீஸ் ஸ்டேஷன் செல்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் சென்று, புகார் தெரிவிக்கும் ஒரு மாதிரி காவல்நிலையமாக அமைந்துள்ளது’ என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

சிதம்ரபம் காவல் நிலையம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா காவல்நிலையம் லால்புரம் ஊராட்சியில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புற வழிச்சாலைக்கு அருகில் முட்புதர்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. காவல் நிலையம் கட்டப்பட்டபோது அப்பகுதியில் சுற்றி வீடுகள் ஏதும் இல்லை. காவல் நிலையத்துக்குச் சுற்று சுவர் இல்லாமல், கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்தது. காவல் நிலையத்துக்குச் செல்ல சரியான சாலை வசதி, தெருவிளக்கு வசதி ஏதும் இல்லாமல், அங்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படும்
நிலை இருந்தது. இதனால் மக்கள் புழக்கம் அதிகம் இல்லாத காவல்நிலையமாக இருந்து வந்தது. 

சிதம்ரபம் காவல் நிலையம்

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக அம்பேத்கார் பொறுப்பேற்றவுடன், புதுப்பொலிவுடன் மக்கள் விரும்பும் காவல் நிலையமாக இன்று மாறியுள்ளது. புதிய காவல் நிலைய கட்டடத்தின் முகப்புப் பகுதியில் தங்க வண்ணத்தில் நான்கு சிங்கங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. `போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகிறவர்கள் நிச்சயம் பிரச்னைகளுடன், மன அமைதி இல்லாமல், மன உளைச்சலுடன் செல்வார்கள். ஆனால், இந்தக் காவல்நிலையத்தைப் பார்க்கும்போதே புத்தம் புதிய பொலிவுடன் சுற்றுச் சுவர், பொது மக்கள் அமர்வதற்கு சிமென்டால் ஆன இருக்கைகள், காவல் நிலையத்தைச் சுற்றி மரக்கன்றுகள், காவல் நிலையத்தின்
உட்பகுதியில் தொட்டிகளில் பூச்செடிகள், வாகனங்கள் நிறுத்தத் தனி ஷெட் என முற்றிலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது பார்க்கும் பொதுமக்களுக்கு மன அமைதியும் ரம்மியமான மனநிலையும் ஏற்படுகிறது’ என்கிறார்கள் அப்பகுதிவாசிகள். 

சிதம்ரபம் காவல் நிலையம்

இதையெல்லாம் தாண்டி உள்ளே சென்றால் முதலில் ஆய்வாளரின் அறை, புத்தம் புதிய பொலிவுடன் கண்ணைக் கவரும் புதிய வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல்களுக்கும் வித்தியாசமான கலரில் திரை சீலைகள், அழகான நாற்காலி, மேஜை என மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. 

சிதம்ரபம் காவல் நிலையம்

அதையும் தாண்டி உள்ளே சென்றால் பார்வையாளர்கள் அமரும் அறை, இருக்கிறது. இதில், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அமர நவீன இருக்கைகள், பூந்தொட்டிகள், ஃபேன் என ஹைடெக்காக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காவல்நிலைய வளாகம் முழுவதும் புதுப்பொலிவுடன் பளிச் என சுத்தமாக அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காவல் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் இரவில் மின்விளக்குகளும் போடப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் மற்றும் காவலர்களின் சீரிய முயற்சியால் சிதம்பரம் தாலுகா காவல்நிலையம் மக்கள் விரும்பும் காவல் நிலையமாகவும் உள்ளது என்றால் மிகையாகாது.