வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (07/10/2018)

கடைசி தொடர்பு:08:03 (07/10/2018)

``படித்தவர்கள் லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு” -ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடும் இந்தச் சமூகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல லஞ்சம் கொடுப்பவர்களும்  குற்றவாளிகள் தான் என  ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

சகாயம்

மதுரையில்  ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் மக்கள் பாதை இயக்கம் சார்பாக தமிழ் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என்று ஏராளமான நபர்கள் பங்கேற்றனர். தங்களது அழகிய தமிழ் கையெழுத்தைப் பதிவு செய்து சிறப்பித்தனர். மேலும் சமூக பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கையெழுத்து நிகழ்ச்சியில் சகாயம் அவர்கள் பேசுகையில், “தமிழின் சிறப்புகளை பற்றி நமக்குத் தெரிந்தாலும்  ஆங்கில மோகம் நம்மைவிட்டுப் போகவில்லை. அது வெறும் பிழைப்புக்கான மொழியே தவிர நம் தாய்மொழி கிடையாது.  தமிழகத்தில் பலரும் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவதையே பெருமையாக எண்ணுகின்றனர். ஆனால் தமிழில் கையெழுத்துப் போடுவதே பெருமைக்குரிய விசயம் தமிழில் கையெழுத்துப்போடுவதை பின்பற்றவேண்டும். லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடும் இந்தச் சமூகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல  லஞ்சம் கொடுப்பவர்களும் குற்றவாளிகள் தான். குறிப்பாகப் படித்தவர்கள் தங்கள் வேலையை எளிமையாக்க லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு" என்றார்

மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்குச் சகாயம் ஐ.எ.எஸ் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.