வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:16:26 (07/10/2018)

‘சமூக நீதி என்பது புதிய தமிழகம் கட்சி ஆட்சி அமைப்பதே!’ - டாக்டர்.கிருஷ்ணசாமி

 
 
கிருஷ்ணசாமி
 
புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில்  நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கிருஷ்ணசாமி,இளைஞரணி  தலைவர் ஷ்யாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
இந்தக்கூட்டத்தில் பேசிய  டாக்டர் கிருஷ்ணசாமி, "பட்டியலிலிருந்து வெளியேற்றாமல் தேவேந்திர குல மக்களின் பொறுமையை மத்திய,மாநில அரசுகள் இனியும் சோதிக்க கூடாது. தமிழக முதல்வரை சந்திக்கும் போது இது குறித்து பேசி உள்ளேன்.ஆனால் அவர்கள் ஏதோ தயக்கம் காட்டுகிறார்கள். தேவேந்திர குல மக்களை பட்டியல் வெளியேற்றத்தை ஆதரிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பட்டியல் வெளியேற்றத்தை ஆதரிக்காத கட்சிகள் தேவேந்திர குலத்தவர்கள் வசிக்கும் பகுதிக்கு ஓட்டு கேட்டு வர முடியாத சூழலை உருவாக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை அடையாளப்படுத்துவதே இனி சமூக நீதி.
திராவிடக் கட்சிகளை அகற்றும் போது தான் நாம் நம் விடுதலையின் சாசனத்தை எழுதுகிறோம் என அர்த்தம். பட்டியல் வெளியேற்றம் என்பது அரசாணை சம்மந்தப்பட்டது அல்ல,அது உளவியல் ரீதியானது.ஆங்கிலேயர் செய்த தவறு தான் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலில் சேர்த்தது. எங்கள் மீது சுமத்தப்பட்ட அநீதியை நீக்க வேண்டும். நாங்கள் பட்டியலிலிருந்து வெளியேறி தமிழ் சாதியாக இருக்கிறோம் என கூறினால் அதை முற்போக்காளர்கள் என கூறி கொள்பவர்கள் வரவேற்கவில்லை.
 
தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடு தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிரானது.இனி சமூக நீதி என்பது தி.மு.க வை அழித்து விட்டு புதிய தமிழகம் ஆட்சி அமைப்பது தான்.இனி நாம் அளிக்கும் வாக்கு மற்றவர்களை ஆட்சி அமைக்க வைக்க கூடாது,நாம் அதிகாரத்தை கைப்பற்றும் விதமாக அமைய வேண்டும். மதம் மாறாமல் பட்டியல் மாற்றமே நாங்கள் கேட்கிறோம். 
 
போராடி தான் பெற வேண்டுமானால் அதற்கும் தயாராக இருக்கிறோம்.எங்களின் போராட்டம் பிரிந்து செல்ல அல்ல,தமிழர்கள் அனைவரும் ஒன்று இணைவதற்காகத்தான்.குடும்ப ஆட்சிகளை ஒழிக்க தமிழர்கள் அனைவரிடமும் இணக்கம் இருக்க வேண்டும்.” எனப் பேசினார்.இம்மாநாட்டில் தேவேந்திர குல அடையாள மீட்பு,பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க