வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (07/10/2018)

கடைசி தொடர்பு:12:27 (07/10/2018)

"பெரியாரையும் அம்பேத்கரையும் பாடப் புத்தகங்களில் படிக்கக்கூடாது!" - வேறென்ன செய்வதாம்?!

ந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழக திராவிட அரசியலின் மையப்புள்ளியாக இருந்து வருகிறார் பெரியார். அவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமூக ஜனநாயகத்திற்கான மாணவர்களின் சார்பில் ’பெரியார் – 140’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அதில், பேராசிரியர் ஜி. அலாய்சியஸ் மற்றும் பத்திரிகையாளர் புனித பாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முதலாவதாக ’பெரியாரும் சமூக போராட்டங்களும்’ என்கிற தலைப்பில் பத்திரிகையாளர் புனித பாண்டியன் பேசினார். “பத்து வயதிற்கு மேல் பள்ளிக்கூடத்திற்கு போகாத பெரியாரின் பெயரில் இன்றைக்குப் பல்கலைக்கழகமே இருக்கிறது. நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து அகராதிகளையும் எடுத்துப் பாருங்கள். எதிலுமே சுயமரியாதைக்கு நிகரான ஒரு வார்த்தையை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது என்றவர் பெரியார். 2500 ஆண்டு காலமாக இருக்கும் சாதி பிரச்னைகளைப் பற்றிதான் நாம் இன்று விவாதித்துக் கொண்டிருக்கிறோமே தவிர தீர்வுகளை நோக்கி நகர்வதில்லை. ஆனால், தான் வாழ்ந்த 95 ஆண்டு காலமுமே சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வை முன்வைத்தவர் பெரியார். தான் கல்லடிப்பட்டு சாவதையே விரும்புவதாகக் கூறியவர் பெரியார். வாழ்க்கையை முழுவதுமாக சமூகத்திற்கு அர்ப்பணித்தவரால்தான் இவ்வாறு பேச முடியும். பெரியார் முன்வைத்த பல்வேறு சிந்தனைகள்தான் இன்று சட்டங்களாகியிருக்கின்றன. இன்று சமூக, பொருளாதார அரசியல் தளத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியாரின் கடினமான உழைப்புதான் காரணம்.

புனித பாண்டியன்

அறியாமையை ஒழிக்க புத்தர் செய்த பணியின் இருபதாம் நூற்றாண்டு வடிவம்தான் பெரியாரும், அம்பேத்கரும். பெரியார் மீதான பல விமர்சனங்களைத்தான் இன்றையச் சமூக வலைதளங்களில் நாம் பெரும்பாலும் காண்கிறோம். அவர்கள் எவருமே பெரியாரின் எழுத்துகளைப் படிக்காமல் விமர்சித்து வருகின்றனர். பெரியாருடைய பேச்சுகளை, எழுத்துகளை தொகுத்ததில் தற்போது வரை மட்டுமே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் இருக்கின்றன. இன்னமும் பெரும் பகுதி தொகுக்கப்படாமலே இருக்கிறது. பிறவி ரீதியிலான இழிவு கூடாது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் பெரியார்” என்றார்.

பேராசிரியர் ஜி. அலாய்சியஸ்:

”கடந்த 15 வருடங்களாக நான் விரும்புவதெல்லாம் பெரியார் கல்வி (Academics) துறையில் பிறக்க மாட்டாரா என்பதாக இருக்கிறது. இங்கு வரலாறு, சமூக அறிவியல், அரசியல் அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் இருக்கும் மாணவர்கள் பெரியாரை தங்களுடைய துறைகளில் பொருத்திப் பார்க்க வேண்டும். இன்று ஒரு பதற்றமானச் சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒருவிதமான அச்ச உணர்வு அனைவருக்கும் இருந்து வருகிறது. இன்று பழைமையான எண்ணங்கள் அனைத்து இடங்களையும் சூழ்ந்து வருகிறது. அனைவருமே ஏதாவதொரு விதத்தில் பெரியாரிடம்தான் வழிகாட்டுதலைத் தேடுகிறோம். இந்தியாவிலேயே தமிழகம் தான் பல்வேறு விஷயங்களில் தனித்து நிற்கிறது. எனவே, நாம் பெரியாரின் எழுத்துகளைத் திரும்பவும் வாசிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

பெரியார் நிகழ்வு

ஒருநாள் வேலைப் பளுவிலேயே நம்மில் பலரும் களைத்துப்போய் விடுகிறோம். ஆனால், 94 வயதிலும் பெரியார் பொது கூட்டங்களுக்குச் சென்று சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். பெரியாரை நம்முடைய மாணவர்கள் பாடத் திட்டங்களில் கொடுத்துள்ள குறிப்புகளைப் படித்து மனனம் செய்து எழுதுவதாகவே இருந்து வருகிறது. இது அம்பேத்கருக்கும் நிகழ்ந்துள்ளது. பெரியாரைப் படிப்பதோ, அம்பேத்கரைப் படிப்பதோ அதுவல்ல. அது அவர்களுடைய சிந்தனைகளுக்கு நியாயம் செய்வதாக அமையாது. பெரியாரின் சிந்தனைகளைக் கோட்பாடுகளை உள்வாங்கிப் படிப்பதே பெரியாரைப் படிப்பதற்குச் சரியான வழியாக இருக்கும்.

சமுதயான இழிவு நீங்க வேண்டும் என 1925-ல் பேசத் தொடங்கிய பெரியார், 1973-ம் ஆண்டு வரை அதை விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். இங்குச் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என வேலை செய்தவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் பெரியார். பின்னர், அவர்களெல்லாம் குறுகிய நோக்கங்களுக்காக மட்டுமே செயல்பட்டு சாதி ஆதிக்கத்தை, அடிப்படையைக் கேள்வி கேட்காமல் மேலாதிக்கத்தை அனுபவிப்பவர்களாகவே இருந்தார்கள் என்பதை உணர்ந்தார். அன்றிலிருந்துதான் பெரியார் தனித்து இயங்கத் தொடங்கினார். அதிகாரம் பெறுவதற்கும், விடுதலைப் பெறுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. அதிகாரம் பெறுவதில் நாம் இருக்கிற கட்டமைப்பை அதிகாரத்தைக் கேள்வி கேட்காமல் அதற்குட்பட்டு சிறப்பான ஒரு இடத்தை அடைவதுதான். ஆனால், விடுதலை என்பது இந்த கட்டமைப்பிலிருந்து விலகி நின்று இதன் அடிப்படையையே கேள்வி கேட்பது. நம்முடைய உழைப்பு பெரும்பாலும் அதிகாரம் பெறுவதில் மட்டுமே இருந்து வருகிறது. இங்குதான் பெரியார் அதிகாரம் பெறவில்லையென்றாலும் இந்தச் சமூக இழிவிலிருந்து விடுதலைப் பெறுவது அவசியம் என்று நினைத்தார். அதற்கு அவருடைய பதிலாக இருந்ததுதான் 'சுயமரியாதை'. ’விமர்சனங்களில் முதன்மையானது மதத்தைப் பற்றிய விமர்சனமாக இருக்க வேண்டும்', என கார்ல் மார்க்ஸ் கூறினார். பெரியார் அது ஐரோப்பாவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் பொருந்தும் என்பதை உணர்ந்திருந்தார். 1925ம் ஆண்டுக்குப் பிறகே பெரியார் அரசியலில் ஈடுபடவில்லை. சமுகத்தை சீர்த்திருத்துவதே அவரின் முதன்மையான பணியாக இருந்தது. அதன் மூலம்தான் சமத்துவத்தை அடையமுடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்” எனப் பேசிமுடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்