வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:12:00 (07/10/2018)

‘ஆசையா வளர்த்தவன பறிகொடுத்துட்டேனே' - மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை மரணம்

திருச்சியில் மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்ததால் ஒரு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருப்பதி - அதிர்ச்சி
 
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த  வலசுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்-பாப்பம்மாள் தம்பதியினர் . கட்டிடத் தொழிலாளியான மாரியப்பனுக்கு, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இதில்  இளைய மகனான திருப்பதி, கல்லூரி படிப்பை படித்து விட்டு,சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.இந்நிலையில் திருப்பதிக்கு உடல்நிலையில் ஏதோ பாதிப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தந்தை மாரியப்பன் வேலை நிமித்தமாக பக்கத்து ஊரான கைக்காட்டியில் இருந்துள்ளார்.  திருப்பதி மரணமடைந்த தகவலை தெரிவிக்க மாரியப்பனின் மூத்த மகன் சென்றுள்ளார்.  தம்பியின் மரண செய்தியை தந்தையிடம் தெரிவித்தால் அவர் அதிர்ச்சியடையக்கூடும் என்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கையோடு அழைத்து வந்துள்ளார்.
 
வீட்டின் அருகே அவர்கள் வந்தபோது, திருப்பதி இறந்துவிட்ட தகவலை அறிந்த அவரின் தந்தை மாரியப்பன் ஆசையா வளர்த்த மகனை பறிகொடுத்துட்டேனே!. எனக் கூறி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மாரியப்பனின் உயிர் பிரிந்தது.
 
இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. தந்தை-மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.மகனும், தந்தையும் இறந்த  தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 
 
பின்னர் நேற்று மதியம் இருவரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டன.மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க