வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:12:30 (07/10/2018)

‘சேவ் சபரிமலா' பதாகையால் டென்ஷனான கேரள அமைச்சர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சிக்கு வந்த கேரள அமைச்சர்கள் முன் 'சேவ்  சபரிமலா' என்ற பதாகையை காட்டியதால் டென்சனாகி  புறப்பட்டுச் சென்றனர்.

சபரிமலை

திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோயில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி விக்கிரகங்கள் ஆண்டுதோறும் ஊர்வலமாக புறப்பட்டுச் செல்வது வழக்கம். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை மற்றும் குனாரகோவில் முருகன் விக்கிரகங்கள் நேற்று புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தன. இன்று பத்மநாபபுரம் சரஸ்வதி விக்கிரகம் மற்றும் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த மன்னரின் உடைவாள் ஆகியவை திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மன்னரின் உடைவாழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பூஜைகளில் கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் 'சேவ் சபரிமலா' என்ற பதாகையை தூக்கிப் பிடித்தபடி 'சாமியே சரணம் அய்யப்பா' என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையிலான போலீஸார் பதாகையுடன் கோஷம் போட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் கேரள அமைச்சர்கள் டென்சன் ஆனார்கள். இதனால் வழக்கமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்டுச் செல்லும் அமைச்சர்கள் சபரிமலை விவகாரத்தால் பேட்டி அளிக்காமல் புறப்பட்டுச் சென்றனர்.