வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (07/10/2018)

கடைசி தொடர்பு:13:09 (07/10/2018)

''அப்போது ஜெ. வீடியோ, இப்போது 'சந்திப்பு ரகசியம்'..!'' - வைகை செல்வன் ரகசியங்கள்

''அப்போது ஜெ. வீடியோ, இப்போது 'சந்திப்பு ரகசியம்'..!''  -  வைகை செல்வன் ரகசியங்கள்

.பி.எஸ். - டி.டி.வி திரைமறைவு சந்திப்புதான் தமிழக அரசியலின் பரபர செய்தி! ''எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியிலிருந்து இறக்குவதற்காக என்னைச் சந்தித்துப் பேச தூது அனுப்பினார் ஓ.பி.எஸ்.'' என்று 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழக'த் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்ததையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக்கொண்டது. உடனடியாக இந்தச் செய்தியை மறுத்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''அ.தி.மு.க-வின் எழுச்சியைக் கண்டு பயந்துபோயுள்ள டி.டி.வி தினகரன், ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க-வைப் பிளவுபடுத்த நினைக்கிறார். அணிகள் இணைப்புக்கு முன்பு நான் டி.டி.வி தினகரனைச் சந்தித்தது உண்மைதான்! ஆனால், இப்போது நான் சந்திக்க முயன்றதாக அவர் கூறுவது பொய்யானக் குற்றச்சாட்டு!'' என்று கூறி மறுத்திருந்தார்.

வைகைச் செல்வன்

இதுகுறித்து, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான வைகைச் செல்வனிடம் பேசினோம்...

''இடைத்தேர்தல்கள் வரும்போதெல்லாம் திசை திருப்புகிற வேலையைத்தான் டி.டி.வி தினகரன் செய்துவருகிறார். ஏற்கெனவே, ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோன்ற வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தினார். அது உண்மையான வீடியோவா, இல்லை பொய்யானதா என்பது தெரியுமுன்னரே தேர்தலும் நடந்துமுடிந்துவிட்டது.
இப்போது திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மீது பொய்யானக் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். ஏற்கெனவே ஒருமுறை டி.டி.வி தினகரனைச் சந்தித்தது உண்மைதான் என்றும் அப்போதைய சூழ்நிலையையும் ஓ.பி.எஸ். தெளிவாக எடுத்துக்கூறிவிட்டார். ஆனால், இந்தச் சந்திப்பு குறித்தத் தகவலை அப்போதே வெளியிடாமல், துருப்புச் சீட்டாகக் கையில் வைத்துக்கொண்டு இப்போது பத்திரிகையாளர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு டி.டி.வி தினகரன் வெளியிடுகிறார் என்பதே உள்நோக்கம் கொண்டதுதான்!

தமிழகம் முழுக்க நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து அ.தி.மு.க தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்த எழுச்சி டி.டி.வி தினகரனின் முகாமுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுமட்டுமல்ல... மதுரையில் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திலும்கூட திரளான தொண்டர்கள் உத்வேகத்துடன் கலந்துகொண்டுள்ளதும் டி.டி.வி தினகரனுக்கு 'கிலி'யை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்களின் இந்த எழுச்சியைத் திசை திருப்புவதற்காகவே இப்படியொரு குற்றச்சாட்டை யோசித்துக் கூறியிருக்கிறார். 

டி டி வி தினகரன்

இதே டி.டி.வி தினகரன் தன்னுடையக் கட்சியை அ.தி.மு.க-வோடு இணைத்துக்கொள்வதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக மின் துறை அமைச்சர் தங்கமணியும் குறிப்பிடுகிறார். அதுகுறித்த ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். ஆக, இருவேறு சம்பவங்கள் இப்படியிருக்கும்போது, 'எங்கே மக்கள் நம்மை மறந்துவிடுவார்களோ...' என்ற சந்தேகம் டி.டி.வி தினகரனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இப்படியொரு துருப்புச் சீட்டு ஆயுதத்தை இப்போது கையில் எடுத்திருக்கிறார். 

அரசியலைப் பொருத்தவரையில் நிரந்தர நண்பனும் கிடையாது; நிரந்தர எதிரியும் கிடையாது என்றுதான் வகைப்படுத்துவார்கள். அந்தளவுக்குத் தினமும் முன்னும் பின்னுமாக அரசியல் நகர்வுகள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி அணி - ஓ.பி.எஸ் அணி இணைப்பு குறித்துப் பேசும்போது, 'அ.தி.மு.க என்ற நீண்ட நெடுநாள் இயக்கம் முடிந்துபோய்விட்டது என்றக் கெட்டப் பெயர் என்னால், இயக்கத்துக்கு வந்துவிடக் கூடாது என்றே இணைந்துகொண்டேன்' என்று ஓ.பி.எஸ் தெளிவாகவேச் சொல்லிவிட்டார். ஆக, டி.டி.வி தினகரனின் குற்றச்சாட்டை 'திசை திருப்பும் முயற்சி'யாகத்தான் நாம் பார்க்கவேண்டும்!'' என்கிறார்.

மக்கள், எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது இடைத்தேர்தலில் தெரிந்துவிடும்! ஆனால், இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பைத் தள்ளி வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஆக, முடிவு என்னவென்று தெரிய காத்திருக்கத்தான் வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்