வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (07/10/2018)

கடைசி தொடர்பு:15:26 (07/10/2018)

"கட்டினு போனோம்.. கையே போச்சு!" சேலம் அரசு மருத்துவமனையில் அலட்சிய சிகிச்சையா?!

"கடந்த வாரம் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்கு சேலம் வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'அரசு மருத்துவமனையில் இரண்டு கைகள் இழந்தவருக்கு மாற்றுக் கை பொருத்தி இந்திய அளவில் மருத்துவத் துறையில் புதிய சாதனை புரிந்துள்ளோம். தமிழக மருத்துவத் துறையைப் பார்த்து இந்திய துணைக் கண்டமே வியந்து நோக்குகிறது' என்று பெருமைபடப் பேசினார்.

ஆனால் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் வலது கையில் சாதாரண கொழுப்புக் கட்டி என்று அனுமதிக்கப்பட்ட 20 வயது இளைஞருக்கு, மருத்துவர்கள் அலட்சியமாகத் தவறான முறையில் அறுவைசிகிச்சை செய்ததால், தன்னுடைய வலது கையை இழந்து (செயல் இழப்பு) நிற்கிறார். இதுதான் அரசு மருத்துவமனையின் லட்சணம்'' என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தருமபுரி பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜீத். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் அவருக்கு கல்வி கானல் நீராகப் போக... அங்குள்ள நூல்மில் ஒன்றில் தொழிலாளியாக இருந்துள்ளார். அப்பா ஓர் ஆஸ்துமா நோயாளி. தம்பி 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன். அம்மா, அப்பாவின் வியாதியைக் குணப்படுத்த ஊர் முழுக்கக் கடனை வாங்கி வைத்திருக்கிறார். ஆக, மொத்தம் குடும்பமே அஜீத்தின் வருமானத்தை நம்பி நகர்ந்துகொண்டிருக்கிறது.

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை

இந்த நிலையில், ஏற்கெனவே அஜீத்துக்குச் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு வலது கையில் ஒரு சாதாரண  கட்டி வந்துள்ளது. அது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது. மேலும், அதே வலது கையில் ஒரு  கட்டி வர,  கடந்த வாரம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கட்டி இருக்கும் இடத்தில் வலி அதிகமாக இருந்ததால், அவர்கள் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள்.

அதையடுத்து, அங்கு அனுமதிக்கப்பட்ட அவரை ஸ்கேன் எடுத்து ஆய்வு மேற்கொள்ளாமல் கடந்த 26-ம் தேதி கசாப்புக் கடைக்கார்களைப்போல ஆபரேஷன் செய்து கட்டியை அகற்றியதோடு மணிக்கட்டு நரம்பையும் சேர்ந்து கட் பண்ணிவிட்டார்கள். இதனால், அவரது வலது கை, மணிக்கட்டுக்குக் கீழே செயலிழந்துவிட்டது. இதனால், அஜீத்தின் ஒட்டுமொத்த குடும்பமும் கண்ணீரோடு பரிதவித்து வருகிறார்கள்.  

இதுகுறித்து அஜீத்தின் தாயார் காமாட்சி, ''முன்கூட்டியே ஸ்கேன் எடுத்துப் பார்த்து ஆபரேஷன் செய்திருந்தால், என் மகன் கை நன்றாக இருந்திருக்கும். அநியாயமாக என் மகன் கையை ஊனமாக்கி விட்டார்கள். இப்போது, 'சென்னைக்கு அழைத்துச் செல்லுங்கள்... சரிசெய்துவிடுவார்கள்' என்று சொல்கிறார்கள்" என்று தலையிலேயே அடித்துக்கொண்டு அழுதவரைச் சமாதானப்படுத்தினோம். 

அஜித் தன்னுடைய பெற்றோருடன்

பின்னர் சிறிதுநேரம் கழித்து அவர்,  ''எங்களுக்கு அஜீத், சங்கீதா, சதீஷ் என மூணு பிள்ளைகள். என் வீட்டுக்காரர் கல் உடைக்கப் போவாரு. அவருக்கு ஆஸ்துமா வியாதி வந்ததிலிருந்து சுமார் ஐந்தாறு வருஷமா எந்த ஒரு வேலைவெட்டிக்கும் போக முடியலை. அதனால பிள்ளைகளை வளர்க்க முடியாம சின்ன வயசுலேயே என் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். அஜீத் நூல் மில்லுக்கு வேலைக்குப் போயிட்டிருந்தான். அவன் வருமானத்தை நம்பித்தான் என் வீட்டுக்காரருக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்து வந்தேன். சின்னவனைப் படிக்க வெச்சுட்டு இருக்கோம். அஜீத்துக்கு ஏற்கெனவே வலது கையில் ஒரு கட்டி வந்தது. அதை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்க் காட்டினோம். கொழுப்புக் கட்டி என்று சொன்ன டாக்டர்கள், அதை ஆபரேஷன் செய்து எடுத்துட்டாங்க. மீண்டும் அதே வலது கையில் முழங்கை பக்கத்தில் ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கட்டி வந்தது. 

அந்தக் கட்டி வளர்ந்து, அது வலிக்கிறது என்று கடந்த வாரம் அஜீத் சொன்னதால், மீண்டும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் அஜீத்தின் தாயார் காமாட்சிகொண்டுபோய்க் காட்டினோம். அவுங்க சேலம் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போங்கனு சொல்லிட்டாங்க. அதையடுத்து, நாங்க கடந்த 24-ம் தேதி சேலத்துக்கு வந்து சேர்ந்தோம். டாக்டருங்க விசாரிக்கவும் இல்லை, ஸ்கேன் பண்ணி பார்க்கவும் இல்லை. தர்மபுரியில் கொடுத்த மருத்துவச் சீட்டை மட்டும் பார்த்துட்டு 26-ம் தேதி ஆபரேஷன் பண்ணி கட்டியை எடுத்துட்டாங்க.

ஆபரேஷன் முடிச்சு ரெண்டு நாள் பையன் கையைத் தூக்கவே முடியாமல் இருந்தான். மணிக்கட்டுக்குக் கீழ் உணர்வே இல்லாமல் ஒரு மாதிரியாக இருப்பதாகச் சொன்னான். டாக்டரிடம் சொன்னோம். டாக்டர் முகம் கொடுத்துக்கூடப் பேசாமல், 'எல்லாம் சரியாயிடும்' என்று சொன்னார். ஆனால், ஒரு வாரம் ஆகியும் சரியாகவில்லை கையைத் தூக்கினால் மணிக்கட்டுக்குக் கீழே விரல்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. டாக்டரோ மிகவும் சாதாரணமாக, 'நரம்பு கட்டாயிடுச்சு'னு சொல்லிட்டுப் போறார்.

அஜீத்தின் வருமானத்தை நம்பித்தான் மகளிர் சங்கத்தில் லோன் எடுத்திருக்கிறேன். வெளியில வட்டிக்குப் பணம் வாங்கி இருக்கிறேன். இப்ப கை ஊனமா போயிட்டதால அவனை, எப்படி வேலைக்குச் சேர்த்துப்பாங்க. நாங்க இனிமே எப்படிப் பொழப்பு நடத்துவது எனத் தெரியலையே'' என்று மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரவீன், ''ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அரசு மருத்துவமனைகளின் லட்சணம் எப்படியிருக்கிறது என்பதை இந்த ஒரு சம்பவத்தைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். முதல்வர், 'மருத்துவத் துறை வளர்ச்சி அடைந்திருக்கிறது' என்கிறார். தமிழ்நாட்டில் 6,000 மதுக்கடைகள் இருக்கின்றன. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களோ வெறும் 1,200 மட்டும்தான் இருக்கின்றன. ஏழைகளுக்கு இன்னும் முறையான மருத்துவம்மருத்துவம் கிடைக்கவில்லை.

 தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் உபகரணங்கள் இல்லை,  போதிய மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருந்து, மாத்திரைகள் இல்லை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை, சீரான மின்சாரம் இல்லை. இந்த நிலையில், 'உலக தரம் வாய்ந்த மருத்துவம் தமிழக அரசு மருத்துவமனையில் பார்க்கப்படுகிறது' என்று கூறுவது நகைப்புக்குரியது. இந்த அஜீத் இளைஞரின் சம்பவத்தைப் பொறுத்தவரை ஸ்கேன் செய்யாமல் மருத்துவம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். விசாரணை மேற்கொண்டு அந்த மருத்துவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார், மிகவும் தெளிவாக.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் டீன்  ராஜேந்திரன், '' அந்த இளைஞருக்கு வந்திருந்தது கொழுப்புக் கட்டி அல்ல. நரம்புக் கட்டி. அதை, பெரும்பாலும் ஆபரேஷன் செய்து அகற்ற மாட்டோம். அந்த இளைஞருக்கு நூறுக்கும் மேற்பட்ட கட்டிகள் நரம்பில் இருக்கின்றன. இதுபோன்ற கட்டிகள் சிலருக்கு ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

கட்டி வளர்ந்து வலி ஏற்பட்டால் மட்டுமே, அந்தக் கட்டியை அகற்றி அது கேன்சர் கட்டியா என்று பரிசோதனை செய்து பார்ப்போம். அப்படி ஆபரேஷன் செய்து பார்த்தபோது நரம்புகள் பாதிக்கப்படவும் கூடும் என்பதால், முன்கூட்டியே அவர்களிடம் தெரிவித்து கையெழுத்து வாங்கிக்கொண்டுதான் ஆபரேஷன் செய்வோம். முறையாக அவர்களிடம் சொல்லிக் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். இதற்கு, ஸ்கேன் எடுத்துப் பார்த்துச் செய்ய வேண்டியத் தேவையில்லை. மேலும், அந்த நரம்பை இயக்குவதற்கு முயற்சி செய்துவருகிறோம்'' என்றார், நம்பிக்கையுடன்.

அந்த இளைஞரின் 'கை'யை மீண்டும் இயங்கவைப்பார்களா, மருத்துவர்கள்?


டிரெண்டிங் @ விகடன்