வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:17:00 (07/10/2018)

சவுதி அரேபியாவில் குமரி மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு!

சவுதி அரேபியாவில் மீன்பிடித்தொழில் செய்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதாக அந்த மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

குமரி மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய விஜய், அவரது தம்பி விவேக், மிடாலத்தைச் சேர்ந்த ஸ்மைல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் ஆகியோர் சவுதி அரேபியா நாட்டில் தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். இந்தநிலையில் சவுதி அரேபியா கடல் பகுதியில் இருந்து மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பும்போது ஈரானைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள், அவர்களை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இதில், ஆரோக்கிய விஜயை தவிர மற்ற மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர் அரோக்கிய விஜயின் உறவினர்கள் கூறுகையில்,"ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீன்பிடி படகை ஓட்டிவந்த ஆரோக்கிய விஜையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறித்து வேறு எந்த தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, அவர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.