வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:18:30 (07/10/2018)

மாநில மரத்தைக் காக்கக் களமிறங்கிய இளைஞர்கள்.. கோவையில் 1 லட்சம் பனை விதைகள் நடவு!

பனை நம் மாநில மரம். தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பனை மரமும் இருக்கும். அந்த அளவு நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளது. வனவிலங்குகளுக்கு உணவு, கால்நடைகளுக்கு தீவனம், நீர்நிலைகளுக்கு செறிவூட்டுதல், பல்லுயிர் பெருக்கம், மனிதனுக்கு வேலை வாய்ப்பு என்று வேரில் இருந்து பழம் வரை அனைத்தும் பயனளிக்கக் கூடியது.

பனை

"பனை மூலமாக கால்நடைகளுக்குத் தீவனம் செய்யலாம்.  இதன் மூலம் தயார் செய்யப்படும் உணவுகளால், கால்நடைகள் 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகம் பால் சுரக்கும். அதேபோல, நுங்கை வைத்து சர்பத், ஐஸ் க்ரீம் தயாரிக்கலாம். பனை பழம் மிகவும் ருசியாக இருக்கும். அதில் கூழ் தயாரிக்கலாம். பனை பழத்தில் பணியாரம் தயாரிக்கலாம். பனங்கிழங்கில் மாவு தயாரிக்கலாம். அவற்றில் கொஞ்சம் அரிசி மாவைக் கலந்தால், தோசை இட்லி, ஆப்பம் தயாரிக்கலாம். இவை மிகவும் ருசியானதாக இருக்கும். பனை பழத்தில் சோப்பு, பற்பொடி, சலவைத் தூள் தயாரிக்கலாம். பனை கிழங்கு மாவில் சத்து அதிகம். அதைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

பனையின் பல்வேறு பாகங்களில் இருந்து நிறைய மருந்துகள் தயாரிக்கலாம். குறைந்தபட்சம், ஒரு மரத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் சம்பாதிக்கலாம். 10 பனைகள் இருந்தால், ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பும், 10 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் உருவாக்கலாம்" என்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.

ஆனால், கடந்த சில தசாப்தங்களாக பலகோடி பனை மரங்கள், பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. பனை மரத்தை காப்பதற்கு அரசுத் தரப்பில் இருந்தும் ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பனை மரத்தைக் காக்க, அரசியல் கட்சித் தலைவர்களும், சூழலியல் ஆர்வலர்களும் களமிறங்கியுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பனை விதைகளை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், கோவையைச் சேர்ந்த, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நதி மேம்பாட்டு குழு, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம், சிறுவாணி விழுதுகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், கோவை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை நடும் பணியில், கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுவந்தனர்.

அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், வனப்பகுதி என்று தொடர்ந்து பனை விதைகளை நட்டு வந்தனர். இந்நிலையில், இறுதிக்கட்டமாக இன்று பனைத் திருவிழா கொண்டாடப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியான இன்றும், கோளராம்பதி குளம், புதுக்குளம், சின்னவேடம்பட்டி ஏரி, நல்லூர் வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டன. இதில், பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர், முதியவர்கள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.