வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (07/10/2018)

`பாலூட்ட சிரமமாக இருந்தது!’ - பிறந்து 35 நாள்களே ஆன குழந்தையைக் கொன்ற தாய் கைது

வேளச்சேரியில் பிறந்து 35 நாள்களே ஆன குழந்தையை ஏரியில் வீசி பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோப்புப்படம்

வேளச்சேரி ஏரிக்கரை அருகில் வசித்து வருபவர் வெங்கண்ணா. அவரது மனைவி உமா. இந்தத் தம்பதிக்கு கடந்த 35 நாள்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு சார்விக் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். நேற்று, இரவு அந்தத் தம்பதி கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் எழுந்து பார்க்கும்போது, குழந்தை வீட்டில் இல்லை. உடனே பதறிய வெங்கண்ணா, வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உடனே, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், நைட்டி அணிந்த பெண் ஒருவர் குழந்தையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில் இருந்தவர் உமாவைப் போன்ற தோற்றத்திலேயே இருந்துள்ளார். மேலும், குழந்தை காணாமல் போனதற்குரிய பதற்றமும் உமாவிடம் காணப்படவில்லை. எனவே, காவல்துறையினர் உமாவிடம் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது, உமா காவல்துறையினரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். பின்னர் குழந்தையைக் கொன்று பிளாஸ்டிக் பையில் சுற்றி ஏரியில் வீசியதை உமா ஒப்புக்கொண்டார்.  பின்னர், ஏரியில் தேடி காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டனர்.

குழந்தையைக் கொன்றது ஏன் என்று காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த உமா, 'குழந்தைப் பிறந்தப் பின்னர் பாலூட்டுவது சிரமமாக இருந்தது. கடந்த 15 நாள்களாக பால் கொடுக்கும்போது மார்பகத்தில் எனக்கு அதிகமான வலி ஏற்பட்டது. இதுகுறித்து கணவரிடமும், தாயிடம் கூறினேன். குழந்தையை என்னுடைய தாயை வளர்க்கச் சொல்லி கூறினேன். என்னுடைய வலியை யாரும் பொருட்படுத்தவில்லை. அதனால், குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்துவிட்டேன். நேற்றிரவு, வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தநேரத்தில் பாலிதீன் கவரில் போட்டு குழந்தையைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் ஏரியில் சென்று வீசிவிட்டேன். பின்னர், யாருக்கும் தெரியாமல் வந்து வீட்டில் படுத்துக்கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.