வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (07/10/2018)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5வது யூனிட் பழுது! - 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி  அனல்மின் நிலையத்தில்  5வது யூனிட்டில் கொதிகலனில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

இந்திய அனல்மின் நிலைங்களில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் மிகவும் பழமையானது. கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய 5 யூனிட்டுகள் உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின் உறப்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதிலுள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கும் மேலாக இயங்கி வருகிறது.

இதனால், அவ்வப்போது மின் உற்பத்தி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபடுகிறது. இதில், சில சமயம் தண்ணீர் பற்றாக்குறையாலும் மின்  உற்பத்தி தடைபட்டு வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது எனப் பல கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  கடந்த மாதம் இங்கு ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் உள்ளா அனல்மின் நிலையங்களில் வழக்கமாக 15 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்படும். ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கிடைக்கிறது. இப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் நிலக்கரி வரத்து குறைந்துள்ளது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, பல மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள தடைதான். சில நாட்களில் சீராகிவிடும்.” என கூறினார். ஆனால், அனல்மின் நிலையங்களில் தற்போதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில் ஏற்கெனவே 1வது மற்றும் 2வது யூனிட்டுகள் நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கபட்டுள்ளது. தற்போது 5வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் திடீரென ஏற்பட்ட பழுதின் காரணமாக  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மொத்தம்  630  மெகாவாட்  மின் உற்பத்தி  பாதிக்கப்பட்டுள்ளது.  5வது யூனிட்டில் ஏற்பட்டுள்ள பழுதினை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க