வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (07/10/2018)

கடைசி தொடர்பு:17:04 (07/10/2018)

பாடப்புத்தக வீடியோவை பார்வையிட்ட ஒரு கோடி பேர்... டிஜிட்டலுக்கு மாறும் பள்ளிக் கல்வித்துறை!

பாடப்புத்தக வீடியோவை பார்வையிட்ட ஒரு கோடி பேர்... டிஜிட்டலுக்கு மாறும் பள்ளிக் கல்வித்துறை!

தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாமல் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது. புதியதாக வெளியிடப்பட்ட பதினொன்றாம் வகுப்பு பாடங்களை மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில், கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து யூ-டியூப்பில் வெளியிட்டு வருகிறது. இந்த காணொளிகளை குறுகிய காலத்தில் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பது ஆச்சர்யம்.

கல்வித் துறை

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்த ஆண்டு 6,9,11-ம் வகுப்புக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டது. 11-ம் வகுப்பு பாடப்பகுதிகள் அதிகமாகவும், பல பகுதிகள் கடினமாகவும் உள்ளன என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் பதினொன்றாம் வகுப்பில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளையும், கடினமான பகுதிகளையும் எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக்கல்வியியல்  ஆராய்ச்சி  பயிற்சி   நிறுவனம். இந்தப் பணியில் பதினைந்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள்  உதவியுடன் பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து வெளியிடப்படுகிறது. இந்த வீடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் என்று தனித்தனியே தயாரித்துப் பதிவேற்றுவதால் மாணவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 

பாடப் புத்தகங்களை வீடியோக்களாக பதிவுசெய்து வரும் படப்பதிவு இயக்குநர் அமலன் ஜெரோமிடம் பேசினோம். ``பதினொன்றாம் வகுப்பில் தடுமாறுபவர்கள், தேர்வு பயம் கொண்டவர்கள் இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முதல்கட்டமாக,  பதினொன்றாம் வகுப்பில் கணிதப்பாடத்தில் 143, இயற்பியலில் 112, வேதியியலில்  81, தாவரவியல் பாடத்தில் 57, கணினி அறிவியலில் 22,  பொருளியல் பாடத்தில் 6, விலங்கியல்  பாடத்தில் 8 என இதுவரை 500 -க்கும் மேற்பட்ட வீடியோக்களைத் தயாரித்துள்ளோம். தற்போது கணக்கு பதிவியியல், பிஸினஸ் மேக்ஸ் போன்ற பாடங்களுக்கான வீடியோக்களைத் தயாரித்து வருகிறோம். பாடம் நடத்துவதுபோல் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் பாடத்தைக் குறித்து உரையாடுவது போலும், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் உரையாடுவது போலும் வீடியோக்களைத் தயாரித்து பதிவேற்றம் செய்து வருகிறோம். 

கல்வித் துறை

வீடியோ உயர்தரத்தில் தயாரிப்பதால் மொபைல்போனில் மட்டுமல்லாது, வகுப்பறையில் புராஜக்டர் கொண்டும் பார்வையிடலாம். பாடத்தில் ஒரு பொருள் குறித்தோ அல்லது இடம் குறித்தோ விவரித்தால் அந்த இடத்துக்கே சென்று நேரடியாகக் காட்சிப்படுத்துகிறோம். இதன்மூலம், மாணவர்கள் அதனை முழுமையாகப் புரிந்துகொள்வார்கள். தினமும் காணொளிகளை பார்வையிட்டு மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆசிரியர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். 

காணொளி பார்வையிடும் மாணவர்கள் பலரும், `புத்தகத்தைப் பார்த்து கஷ்டம் என்று நினைத்தோம். ஆனால்,  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வீடியோக்களை பார்த்தவுடன் எங்களது பாடங்கள் ஈஸியாகி விட்டன' என்கின்றனர். ஆசிரியர்கள், `தற்போதுள்ள பாடங்கள் நாங்கள் படித்த காலத்தில் இல்லை. இதனால், புதிய பகுதிகளை நாங்களே வீடியோக்களைப் பார்த்துத் தெரிந்துகொள்கிறோம்' என்கின்றனர்.  விரைவில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் காணொளிகளைத் தயாரித்து வெளியிடத் தயாராகி வருகிறோம். ஒவ்வொரு வீடியோவும் அடிப்படை விஷயத்தில் இருந்து ஆரம்பிப்பதால் மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கு நம்பிக்கையோடு தயாராகவும் உதவும்" என்றார்.

விளக்கம் தெரியாத சொல்லுக்கு விளக்கம் தேவை என்றால்  டிக்ஸனரியை தேடுவோம்.  தற்போது பாடத்தின் விளக்கத்தைத் தேட யூ-டியூப்பில் தேட வேண்டிய காலத்தில் இருக்கிறோம். தமிழக பள்ளிக் கல்வித் துறை, நீண்ட காலமாக பாடத்திட்டத்தை மாற்றியமைக்காமல் இருந்தது மாறி தற்போது தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி டிஜிட்டல் வடிவில் பாடங்களை யூ-டியூப் (TN SCERT) சேனல்  பதிவேற்றம் செய்து பெருமை சேர்த்து வருகிறது.  பாராட்டுவோம்.


டிரெண்டிங் @ விகடன்