வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (07/10/2018)

கடைசி தொடர்பு:16:32 (07/10/2018)

'மோடிக்கு ஐ.நா விருது வழங்கியது ஏமாற்று வேலை' - கொதிக்கும் மன்சூர் அலிகான்

பிரதமர் மோடிக்கு 'பூமியன் சாம்பியன்'(Champion of the Earth) விருது வழங்கியது ஏமாற்று வேலை என்று மன்சூர் அலிகான் கடுமையாக விமர்சித்துள்ளார். 

மன்சூர் அலிகான்

நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஏரிக் கரையில் பனை விதை நடும் பணி நடைபெற்றது. அதில், அம்பத்தூர், கொரட்டூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பனை விதையை நடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆயிரக்கணக்கான பனைவிதைகள் நடப்பட்டது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார்.

மன்சூர் அலிகான்

பனைவிதை நடுவது குறித்து அவரிடம் பேசினோம். `'கடந்த ஒரு வருடமாக பத்து லட்சத்துக்கும் அதிகமான பனை விதைகளை நட்டுள்ளோம். இது, தற்போது அத்தியாவசியம்;கட்டாயம். சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை ஈச்ச மரம் அவர்களுடைய சின்னமாக உள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரை பனை மரங்கள் அவர்களுடைய வாழ்வியலாக உள்ளது. பனை, தமிழ்நாட்டின் மரம். நம் மக்களின் உயிர், ஜீவாதாரம், வாழ்வாதாரம் எல்லாம் இந்தப் பனை மரம்தான். குற்றாலத்தில் பனை ஓலையில் செய்யப்பட்ட விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. அந்தப் பொருள்கள் எல்லாம் அனைவரது பயன்பாட்டுக்கும் வரவேண்டும். கருப்பட்டி, பனைவெல்லம், பதநீர் உள்ளிட்ட உணவுப் பொருள்களை பனை மரம் வாயிலாகப் பெறலாம். பனை மரத்தை நட்டுவைத்தால் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும். இந்த மரம் 120 வருடங்கள் வாழக்கூடியது. 12 ஆண்டுகளில் வளர்ந்து பயன் தரக் கூடியது.  நாம் தமிழர் இயக்கம், மக்களுடன் இணைந்து  பனை மரம் விதைப்பை முன்னெடுத்துவருகிறது. பதநீரை பாட்டிலில் அடைத்துவைத்து விற்பனை செய்யும் முறையைக் கொண்டுவரவேண்டும். பனை மரத்தில் ஏறி, காய் பறிப்பதை இலகுவாக்கவேண்டும்.

தற்போதுள்ள அரசை துரத்த வேண்டும். இந்த அரசு, இயற்கையைப் பாதுகாக்கும் தகுதியற்ற அரசாக இருக்கின்றது. இவர்கள் மத்திய அரசுக்கு அடிபணிந்து வருகின்றனர். சுற்றுச்சூழலைக் கெடுப்பவரே மோடிதான். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி, அதனைச் செய்யவில்லை. ஜி.எஸ்.டியால் பல்வேறு தொழில்கள் முழுவதுமாக முடங்கியுள்ளன. மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபை 'பூமியின் சாம்பியன் விருது’ வழங்கியது சுத்த ஏமாற்றுவேலை'’ என்று தெரிவித்தார்.