வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:17:30 (07/10/2018)

'அமித்திஸ்ட்' உணவக உரிமையாளருக்கு லுக் அவுட் நோட்டீஸா? - சிலைக் கடத்தல் விவகாரம்!

சென்னை, போயஸ் கார்டனில் நடந்த சோதனையில் ஏராளமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதையடுத்து, சிலைக் கடத்தல் தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சிலைக் கடத்தல்

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய தொடர் சோதனையில், 200-க்கும் அதிகமான சிலைகளை மீட்டிருக்கிறார். இந்நிலையில் சைதப்பேட்டையில், நடிகர் ரன்வீர் ஷா வீட்டில் சோதனை செய்ததில், ஏராளமான சிலைகளை மீட்டதை அடுத்து, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்குக்  கடந்த வாரம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ''ரன்வீர்ஷா, குஜராத்தில் இருப்பதாகவும், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை'' என்று அவரது வழக்கறிஞர் தங்கராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில், ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவ் வீடு போயஸ் கார்டனில் உள்ளது. அவரது வீட்டில் கடந்த 5-ம் தேதி சோதனை செய்தபோது, மண்ணுக்கடியில் இருந்து 23 சிலைகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். சென்னையில் உள்ள 'அமித்திஸ்ட்' உணவகத்தின் உரிமையாளரான கிரண்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், ''கிரண்ராவுக்கு இதுவரை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை என்றும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், நாளை(8.10.18) அலுவல நாளில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும்'' என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.